ஐடிஇயில் பகுதிநேரக் கல்வி பயிலும் முதிர்ச்சியடைந்த மாணவர்கள் அதிகரிப்பு

ஐடிஇயில் பகுதிநேரக் கல்வி பயிலும் முதிர்ச்சியடைந்த மாணவர்கள் அதிகரிப்பு

2 mins read
3169c253-c5ea-4939-89b7-56783b707bed
தற்போதைய நிலவரப்படி ஐடிஇயில் உயர் நைட்டெக், நைட்டெக் பாடங்களைப் பகுதி நேரமாகப் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 53 விழுக்காட்டினர் 31 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளோர் ஆவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் (ஐடிஇ) பகுதிநேரக் கல்வி பயிலும் 31 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐடிஇயில் உயர் நைட்டெக், நைட்டெக் பாடங்களைப் பகுதி நேரமாகப் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 53 விழுக்காட்டினர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டில் இந்த விகிதம் 34 விழுக்காடாக இருந்தது.

முதிர்ச்சியடைந்த மாணவர்களிடையே பிரபலமாக இருக்கும் பகுதிநேரப் பாடங்களில் மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், வர்த்தக நிர்வாகம் ஆகியவை அடங்கும்.

ஐடிஇயில் முழு நேர மாணவர்களாகப் பயிலும் முதிர்ச்சியடைந்த மாணவர்களிடையே பிரபலமாக இருக்கும் பாடங்களில் தாதிமைக் கல்வி, இயந்திரவியல் தொழில்நுட்பம், மின்னணுப் பொறியியல், தகவல் தொழில்நுட்பக் கல்வி ஆகியவை அடங்கும்.

ஐடிஇயில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் முதிர்ச்சியடைந்தோருக்கு வேலை அல்லது குடும்பக் கடப்பாடுகள் இருக்கக்கூடும்.

எனவே, அவர்களுக்கு வசதியாகப் பகுதி நேரக் கல்வி, மாலை நேர வகுப்புகள் போன்ற நீக்குப்போக்குள்ள கற்றல் தெரிவுகளை ஐடிஇ வழங்குகிறது.

குடும்ப வருமானத்தைப் பொறுத்து, முழு நேரக் கல்வி பயிலும் சிங்கப்பூரர்களுக்கு நிதி உதவி வழங்குவதாகவும் ஐடிஇ கூறியது. இது முதிர்ச்சியடைந்த மாணவர்களுக்கும் பொருந்தும்.

அரசாங்கம் நிதி வழங்கும் உயர்கல்வி சமூக உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை ஆகியவை ஆண்டுக்கு $1,600 வரை வழங்குகின்றன.

அத்துடன், ஐடிஇயில் சேர்ந்து பயில்வதற்கான கட்டணத்தைச் செலுத்தவும் தேவையில்லை.

மேலும், வசதி குறைந்த மாணவர்கள் தங்களுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்க $1,000 வரை நிதி வழங்கப்படுகிறது.

அரசாங்க உதவித் தொகைகள் மட்டும் இல்லாது, ஐடிஇயும் மாதாந்திர நிதி உதவித் திட்டத்தை வழங்குகிறது.

இதன்மூலம் மிகவும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அவர்களது அன்றாடச் செலவுகளுக்காக ஆண்டுக்கு $1,800 வரை வழங்கப்படுகிறது.

குறுகியகால நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாணவர்களுக்கு சிறப்பு மாணவர் உதவித் திட்டம் மூலம் $600 வரை வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்