டான் சீ லெங்: வட்டியைக் குறைக்க மசேநி சிறப்புக் கணக்கை மூடவில்லை

2 mins read
2de2bb0f-427e-45a0-8abe-5e83f1c99bba
உட்லண்ட்சில் உள்ள மத்திய சேமநிதி நிலையம். - படம்: சாவ்பாவ்

மத்திய சேமநிதியில் (மசேநி) 55 வயதையும் தாண்டியோரின் சிறப்புக் கணக்குகளை மூடி, வழங்கப்படும் வட்டித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின் எண்ணம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (28 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாறாக, நீண்டகாலச் சேமிப்புக்கு உகந்த வகையில் தொகையை ஓய்வுக்கால கணக்கில் நிரப்புவதே இலக்காகும் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் நாடாளுமன்ற விவாதத்தின்போது அவர் இவ்வாறு சொன்னார்.

அடுத்த ஆண்டு முதல் 55 வயதையும் தாண்டியோரின் மசேநி சிறப்புக் கணக்குகள் மூடப்படும் என்று இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருவரின் சிறப்புக் கணக்கு மூடப்பட்ட பிறகு அதில் இருக்கும் தொகை ஓய்வுக்காலக் கணக்கிற்கு மாற்றப்படும்.

ஓய்வுக்காலக் கணக்கில் அதிபட்சத் தொகை நிரப்பப்பட்ட பிறகு எஞ்சிய தொகை மசேநி சாதாரண கணக்கிற்கு மாற்றப்படும்.

மசேநி சாதாரண கணக்கு, சிறப்புக் கணக்கு ஆகிய இரண்டுக்கும் வழங்கப்படும் வட்டியின் விகிதம் மாறுபடும். சிறப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்கு நான்கு விழுக்காடு வட்டி வழங்கப்படும். சாதாரண கணக்கில் உள்ள தொகைக்கு அந்த விகிதம் 2.5 விழுக்காடாகும்.

அந்த வகையில், அரசாங்கம், சிறப்புக் கணக்கில் கூடுதலாக எவ்வளவு தொகை வழங்குகிறது என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுன்ற உறுப்பினரான லியோங் மன் வாய் கேள்வி எழுப்பினார். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், புதன்கிழமையன்று தனது இறுதி உரையை ஆற்றிய பிறகு திரு லியோங் அந்தக் கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த திரு வோங், அரசாங்கம் கூடுதலாக வழங்கும் தொகை குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்று கூறினார். எனினும், நீண்டகாலத்தில் ஓய்வுக்கால கணக்கில் உள்ள தொகைக்கும் குறைந்தது நான்கு விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்றும் அதுவே இந்நடவடிக்கைக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்