சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நூல் வரிசையில் இணைகிறது ‘நீங்கா நினைவலைகள்’.

முன்னோடிகளுடன் இன்பத் தருணங்களை நினைவுகூரும் ச.வரதனின் புதிய நூல்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய அங்கீகாரமான கலாசாரப் பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன், ‘நீங்கா நினைவலைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

உற்றார், உறவினர், சிங்கப்பூர் தமிழ்த்துறையினர் சேர்ந்து கொண்டாடிய அவரது 90வது பிறந்தநாள் விழாவில் இவரின் நூல் வெளியீடு கண்டது.

பாலஸ்டியரில் உள்ள ஹோம்டீம் என்எஸ் மன்றத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தை கலாசார, சமூக, இளையர் அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பித்தார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ, தமிழகத்தின் முதல்வராக இருந்த சி.என்.அண்ணாதுரை, முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் ஆகியோரைப் பற்றியும் அவர்களுடனான தம் நேரடி அனுபவங்களையும் திரு வரதன் அந்நூலில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத் தலைவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பி. கோவிந்தசாமி, நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் அமரர் ஆ.பழனியப்பன், ஊடகவியலாளர் திரு கார்மேகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக ஆளுமைகளையும் ஆர்வலர்களையும் பற்றிய குறுங்கட்டுரைகளையும் அந்நூலில் திரு வரதன் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு கட்டுரையிலும் அந்தந்த ஆளுமையுடனான தமது உறவாடல், ஊடாட்டங்களை திரு வரதன் விளக்கியுள்ளார்.

மொத்தம் 128 பக்கங்களைக் கொண்ட இந்நூல், சிங்கப்பூர் சமூகத்தின் ஒரு காலக் கண்ணாடியாக அமைந்துள்ளது. இந்நூல் ஆங்கிலத்தில் ‘Etched in Memories’ என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.

‘வேதனையின் விளிம்பிலிருந்து எழுதப்பட்டது’

வலது கையில் ஏற்பட்ட சதைப்பிடிப்பு காரணத்தினால் நூலை வேதனையின் விளிம்பிலிருந்து எழுதியதாக திரு வரதன், தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நூலை எழுத ஆறு மாதங்கள் ஆனது. இதற்கான நிதியாதரவு கிடைக்காததால் கைப்பணத்தைச் செலவழித்து நூலை வெளியிட்டேன்,” என்று திரு வரதன் கூறினார்.

திரு வரதனின் நூல் தகவல் பெட்டகம் என்ற முறையில் சிறப்பு கொண்டுள்ளதைத் தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர.

“இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிலர் பற்றி பலரும் அறிந்திராத விவரங்களை திரு வரதன் தந்துள்ளார். அந்த வகையில் இந்த நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதில் ஐயமில்லை,” என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறினார்.

இந்த நூல் முக்கியமான நூல் என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவரும் ஓய்­வு­பெற்ற தமி­ழா­சி­ரி­ய­ரு­மான திரு மு.அ. மசூது.

சிங்கையின் முன்னோடித் தமிழ்க் கலைஞரான வரதனின் தனி வாழ்வு பற்றியும் அதிலுள்ள நாட்டின் வரலாறு பற்றியும் அறிய ஓர் அரிய வாய்ப்பை இந்நூல் வழங்குவதாக மூத்த கல்வியாளரும் முன்னாள் வானொலி கலைஞருமான மீனாட்சி சபாபதி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“திரு வரதன் தம் வாழ்வில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். ஏறக்குறைய 70 ஆண்டுகாலத்துக்கு மேலாக சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர். சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம் மூலமாக பல நாடகங்களை மேடையேற்றியவர்,” எனப் புகழ்ந்தார் திருமதி மீனாட்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!