அணுவாற்றலைப் பயன்படுத்தி தூய்மையான எரிசக்தித் தயாரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் சிங்கப்பூரின் தீவிர முனைப்பைக் காட்டும் விதமாக, அணுசக்தித் தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆய்வுகளுக்குக் கூடுதல் வளங்களை ஒதுக்கவும் அந்தத் துறைசார்ந்த ஆகச் சிறந்த திறனாளர்களுக்குப் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய ஆய்வுகளுக்காக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் வெள்ளி செலவில் புதிய ஆய்வுக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதில் ஏறக்குறைய 100 ஆய்வாளர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
சிறிய அளவிலான அணு உலைகள் முதற்கொண்டு, தேவைப்பட்டால் ‘லெகோ’ விளையாட்டு அடுக்குகளைப்போல அவற்றைப் பெரிதுபடுத்துதல், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கதிரியக்கப் பொருள் எவ்வாறு கசியும் என்பதுவரை, பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் ஆய்வுசெய்வர்.
சிங்கப்பூர் அணுசக்தி ஆய்வு, பாதுகாப்புத் திட்ட இயக்குநரான பேராசிரியர் சுங் கெங் இயோ, “சிங்கப்பூர் அணுமின்சக்தியை விநியோகிப்பது தொடர்பில் உறுதியான முடிவை எடுக்குமுன், அணுவாற்றல் பாதுகாப்பு குறித்த ஆழமான புரிதலும், உள்ளூர்த் திறனாளர்கள், மனிதவளம் ஆகியவையும் நமக்கு இருப்பது அவசியம்,” என்று கூறினார்.
புதிய ஆய்வு நிலையம், அணு உலைப் பாதுகாப்பு முதல் கதிரியக்க உயிரியல் (மனிதர்களின் உடல்நலத்தில் கதிரியக்கத்தின் தாக்கம்), கதிரியக்க வேதியியல் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.
சுற்றுச்சூழலில் இயற்கையாகக் காணப்படும் கதிரியக்கப் பொருள்களின் அளவுக்குமேல் கதிரியக்க அளவு அதிகரித்தால் அதை உடனடியாகக் கண்டுபிடிப்பதும் அதன் முக்கியப் பணிகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அணுசக்திப் பாதுகாப்பில் பெரிதும் கவனம் செலுத்தப்படும். கதிரியக்கக் கசிவு ஏற்படுத்தக்கூடிய விபத்துகளைத் தடுப்பதிலும், அவற்றின் பாதிப்பிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதிலும் புதிய ஆய்வு நிலையம் கவனம் செலுத்தும்.
உரைகள் மூலம் நிலையத்தின் பணிகள் குறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான அவர்களின் அச்சங்கள், தவறான நம்பிக்கைகளைப் போக்கவும் திட்டமிடப்படுகிறது.