தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்குக் கூடுதல் சம்பளம்; மாணவர்களுக்குக் குறைந்த கட்டணம்

2 mins read
6afae325-9ed0-47e7-96ef-b39e3464d63f
2024ஆம் ஆண்டுக்கும் 2026ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் ஊதியம் 12 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார். சிறப்புக் கல்வி உதவி ஆசிரியர்களின் சம்பளம் 15 விழுக்காடு வரை உயரக்கூடும் என்றார் அவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த சில ஆண்டுகளில் சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் கல்வியின் தரத்தை உயர்த்தவும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவை வலுப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கும் 2026ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் ஊதியம் 12 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கல்வி உதவி ஆசிரியர்களின் சம்பளம் 15 விழுக்காடு வரை உயரக்கூடும் என்றார் அவர்.

2024ஆம் ஆண்டிலிருந்து சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் ஆகியோருக்கான தொடக்க சம்பளம் முறையே 15 விழுக்காடு, 17 விழுக்காடு வரை உயரும் என்று டாக்டர் மாலிக்கி, மார்ச் 4ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

கல்வி அடிப்படையில், பிரதான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காகச் செலவழிக்கப்படும் தொகையைவிட சிறப்புக் கல்விப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் செலவு செய்யப்படுவதாக டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.

சிறப்புக் கல்வி ஆசிரியர் பணிக்கு மேலும் பலரை ஈர்க்க அவர்களுக்கான சம்பளம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது ஏறத்தாழ 1,700 சிறப்புக் கல்வி ஆசிரியர்களும் 800 சிறப்புக் கல்வி உதவி ஆசிரியர்களும் உள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்குள் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் மாதந்தோறும் $3,000லிருந்து $7,000க்கும் அதிகமான சம்பளம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புக் கல்வி உதவி ஆசிரியர்களின் மாதச் சம்பளம் $2,000லிருந்து $4,000க்கும் அதிகமாக இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தற்போதைய நிலவரப்படி சிறப்புக் கல்வி மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பிரதான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் செலுத்தும் பள்ளிக் கட்டணத்தையே செலுத்துவதாக டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.

ஒன்பது சிறப்புக் கல்விப் பள்ளிகளின் கட்டணம் 60 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

கூடுதல் பள்ளிக் கட்டணம் வசூலித்த ஆறு சிறப்புக் கல்விப் பள்ளிகள் 2020ஆம் ஆண்டில் அவற்றின் கட்டணத்தை குறைந்தது 25 விழுக்காடு குறைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் சிறப்புக் கல்விப் பள்ளியில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் செலுத்த வேண்டிய அதிகபட்ச கட்டணம் $150லிருந்து $90ஆகக் குறையும் என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து நடப்புக்கு வரும் இந்த மாற்றம் மூலம் ஏறத்தாழ 3,500 மாணவர்கள் பலனடைவர் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 25 சிறப்புக் கல்விப் பள்ளிகளில் தற்போது கிட்டத்தட்ட 8,000 மாணவர்கள் பயில்வதாக டாக்டர் மாலிக்கி கூறினார்.

குறிப்புச் சொற்கள்