இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சிங்கப்பூர் ஆடவர் பிடிபட்டார்.
50 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரின் பின்பகுதியில் ஒளிந்துகொண்டிருந்ததாக ஜோகூர் சுங்கத்துறை இயக்குநர் அமினுல் இஸ்மீர் முகம்மது சொஹைமி கூறினார்.
இந்தச் சம்பவம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதியன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவருக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு மலேசியப் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்குத் தெரியாமல் தம்மை மலேசியாவுக்குக் கொண்டு செல்ல அப்பெண்களுக்கு அந்த ஆடவர் S$3,000 கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று திரு அமினுல் தெரிவித்தார்.
அந்த ஆடவருக்குச் சிங்கப்பூரில் சட்ட ரீதியாகச் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகக் கடப்பிதழ் பெற முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூவருக்கும் எதிராக மலேசியக் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தண்டனைக் காலத்துக்குப் பிறகு அவர் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூர் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
