ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் $6 மில்லியனுக்கு மேல் பெறுமானமுள்ள மூன்று வீடுகளை சிங்கப்பூரர் ஒருவர் வாங்கினார்.
அந்த வீடுகள் சீன நாட்டவர் ஒருவருக்காக வாங்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணத்தையும் அந்த சீன நாட்டவரே கொடுத்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீடுகள் கட்டுப்பாடுகளற்ற குடியிருப்பு வீடுகள் இல்லை என்பதால் அவற்றை வெளிநாட்டவர் வாங்க முடியாது.
அவற்றை சீன நாட்டவர் சார்பாக வாங்கிய டான் ஹுவி மெங் என்பவருக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அன்று இரண்டு ஆண்டுகள், மூன்று மாதம், மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த நொடித்துப்போன நபர் ஹுவாம்போ என்ற நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்துள்ளார். அவருக்கு நீதிமன்றம் $3,000 அபராதமும் விதித்தது.
இதில் வழக்கு விசாரணைக்குப் பின் மாவட்ட நீதிபதி ஜஸ்விந்தர் கவுர் டான் மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகள் குடியிருப்பு சொத்து சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்டன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த மூன்று வீடுகளுக்கும் சீன நாட்டவரான ஸான் குவோடுவான் பணம் கொடுத்தார் என்று அறியப்படுகிறது. அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள ஒரு தெருவின் அனைத்து வீடுகளையும் வாங்கி பின்னர் அவற்றை அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்பாக மாற்ற அந்த சீன நாட்டவர் திட்டம் தீட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

