அனைத்து துணை நகரங்களையும் சில தனியார் குடியிருப்புப் பேட்டைகளையும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் திட்டத்துக்கு $1 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது கூரையுடன் கூடிய இணைப்புப் பாதைகள், முதியோருக்கு நட்பார்ந்த முறையில் இருக்கும் வண்ணம் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
இத்துடன் பாதசாரிகள் பயன்படுத்தும் மேலும் பல மேம்பாலங்களுக்கு மின்தூக்கி வசதி செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கென அடுத்த பத்தாண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நடப்பதற்கு, சைக்கிள் ஓட்டுவதற்கு அதிக சாலை வசதி ஏற்படுத்தும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக மேலும் பல சாலைகள் இவற்றுக்கென ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவை யாவும் 2026ஆம் ஆண்டுக்குள் இடம்பெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு எதிரான விதிமுறைகளும் கடுமையாக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டிலிருந்து தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு மணிக்கு 6 கிலோமீட்டர் என வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவை நடப்பதற்கு சிரமம் உள்ளதாக சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது மற்ற மருத்துவ காரணங்களுக்காக இந்தச் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருப்போர் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் விதிமுறை வர உள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செலவின ஒதுக்கீடு தொடர்பான விவாத்தின்போது போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அறிவித்தனர்.
இதற்கென கூடுதலாக ஒதுக்கப்படும் $1 பில்லியன் நிதி அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்பட உள்ள தேசிய சிறப்பாக மூப்படையும் $3.5 பில்லியன் எஸ்ஜி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் திட்டத்தில் வீடமைப்பு, துடிப்பாக மூப்படைதல், பராமரிப்பு சேவை ஆகியவை அடங்கும். இவை யாவும் முதியோர் யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ உதவும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.


