சிங்கப்பூரில் அரங்கேறிவரும் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் தொடர்பான மோசடியில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 45 பேரிடம் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அவர்களில் 25 ஆண்கள், 20 பெண்கள். அந்த மோசடியில் சிக்கியோர் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தம் 571,000 வெள்ளியை இழந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 17லிருந்து 57 வயதுக்கு உட்பட்டவர்கள். சென்ற மாதம் 26ஆம் தேதிக்கும் இம்மாதம் ஐந்தாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர் என்று காவல்துறை வியாழக்கிழமை (மார்ச் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
டெலிகிராம், எக்ஸ், ஃபேஸ்புக், கெரோசல், ஸியாவ்ஹோங்ஷு போன்ற தளங்களில் டெய்லர் சுவிஃப்ட் நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டதை மோசடியில் சிக்கியோர் அறிந்தனர். அதற்குப் பிறகு மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப், வீசாட் போன்ற செயலிகளின் மூலம் ‘வாடிக்கையாளர்களிடம்’ பேநவ் போன்ற முறைகளின்வழி கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
நுழைவுச்சீட்டுகளைப் பெறாதபோது கட்டணம் செலுத்தியோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட சிலருக்குப் போலி நுழைவுச்சீட்டுகளும் அனுப்பப்பட்டன. டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சியில் அவற்றை வைத்திருந்தோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

