பயணியின் கால்கள்மீது பேருந்து ஏறியது; ஓட்டுநர் குற்றவாளி எனத் தீர்ப்பு

பயணியின் கால்கள்மீது பேருந்து ஏறியது; ஓட்டுநர் குற்றவாளி எனத் தீர்ப்பு

2 mins read
ec47362c-ddca-4ce2-bfb3-c0d46df56477
கடந்த மே 27ஆம் தேதி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காணப்பட்ட பேருந்துகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பயணி இறங்கியதை உறுதிசெய்துகொள்ளாமல் பேருந்தை இயக்கியதில் அப்பயணி கீழே விழுந்து, அவர் மீது பேருந்து ஏறிய சம்பவத்தில் ஓட்டுநர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மலேசியரான குணசீலன் ஆர் சுப்பிரமணியம், கவனக்குறைவால் கடுமையான காயம் ஏற்படுத்தியதாக மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

சிங்கப்பூர்-ஜோகூர் எக்ஸ்பிரஸ் எனும் பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் அவர், 2019ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை 10.45 மணியளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பயணிகள் இறங்குவதற்காகப் பேருந்தை நிறுத்தினார்.

அந்தப் பயணிகளில் 74 வயது துமினா சாப்பியும் ஒருவர்.

பயணிகளை இறக்கிவிட்டு ஓட்டுநர் பேருந்தை மீண்டும் ஓட்டிச் சென்ற பிறகு திருவாட்டி துமினா தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கக் காணப்பட்டார். அவரது கால்கள் இரண்டிலும் பேருந்தின் பின்சக்கரம் ஏறியதாகக் கூறப்பட்டது.

விசாரணையில், தன் மீது தவறில்லை என்று குணசீலன் வாதிட்டார்.

ஆனால் தான் பேருந்தில் பின்வாயிலில் நின்றுகொண்டிருந்தபோதே அது திடீரென்று நகர்ந்ததால் வெளியே விழுந்ததாகத் திருவாட்டி துமினா சாட்சியமளித்தார். தனது கால்களில் பேருந்தின் ‘டயர்’ ஏறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்தின் கதவை மூடிய பிறகு ஏதோ மேடான பொருளில் பேருந்து ஏறியதுபோல உணர்ந்ததாக குணசீலன் ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தையடுத்து திருவாட்டி துமினாவிற்கு பாதங்கள், கால்கள், கால்விரல்கள், இடுப்பு எலும்பு போன்ற பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குணசீலன் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகவும் பயணிகள் இறங்கும்போது அவர் கைத்தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் குணசீலன் அதை மறுத்தார்.

மார்ச் 15ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்