தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய இசைக்குழுவின் நிகழ்ச்சி தொடர்பில் இணைய மோசடி

2 mins read
afa4c0e0-74ac-42ae-9ec7-1a3c742fb746
மோசடிக்காரர் எனக் கருதப்படுபவர் தொலைபேசியில் பரிமாறிக்கொண்ட தகவல்களின் படங்கள்.  - படங்கள்: சோங் யோக் மிங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

‘வேவ் டு எர்த்’ எனும் தென்கொரிய இசைக்குழு மார்ச் 4ஆம் தேதி நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இணையம் மூலம் நுழைவுச்சீட்டு வாங்கிய ஏறக்குறைய 30 பேர் மோசடிக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

அவர்கள் வைத்திருந்த நுழைவுச்சீட்டுகள் செல்லாதவை என்று கூறி நிகழ்ச்சிக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒவ்வொரு நுழைவுச்சீட்டும் கிட்டத்தட்ட $100க்கு வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கேரசல், டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் அந்த நுழைவுச்சீட்டுகளை அவர்கள் வாங்கியது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில் ஒருவரான திரு சோங் யோக் மிங், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, அதிகாரபூர்வ இணையத்தளத்தின் மூலம் நுழைவுச்சீட்டு வாங்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

எனவே டெலிகிராம் செயலியின் மூலம் ஒருவரிடம் $200க்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை வாங்கினார். ஒரு பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருந்த அந்த நுழைவுச்சீட்டுகள் ஒவ்வொன்றும் $140 மதிப்பிலானவை.

நிகழ்ச்சி நாளன்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதுதான் மோசடிக்கு ஆளானதை அவர் உணர்ந்தார். தன்னைப் போன்றே பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசியபோது, அதே பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகளை வாங்கி அவர்களும் ஏமாந்தது தெரியவந்தது.

சமூக ஊடகங்களில் தேடிக் கண்டுபிடித்து விசாரித்ததில் அந்தப் பெண் கேரசல் தளத்தில் இரண்டு நுழைவுச்சீட்டுகளை விற்றதாகக் கூறினார். அதைப் பயன்படுத்தி வேறு யாரோ மோசடி செய்ததாக அவர் சொன்னார்.

தன் பெயரில் மோசடி இடம்பெற்றது வேதனையளிப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்திருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் கூறினார்.

இந்த மோசடி குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்