‘சிங்கப்பூர் ஸ்கை லேன்டர்ன் ஃபெஸ்டிவல்’ எனப்படும் ஒளிக்கூண்டு நிகழ்ச்சி குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
செந்தோசாவில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சிலர் புகார் அளித்ததோடு கோபமடைந்த சில பங்கேற்பாளர்கள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து தங்களிடம் புகார் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் வியாழக்கிழமையன்று (மார்ச் 7) காவல்துறை உறுதிப்படுத்தியது.
சென்ற மாதம் 21ஆம் தேதியன்று செந்தோசாவின் பலாவான் கடற்கரையில் மெழுகுவத்திகளால் எரியும் ஒளிக்கூண்டுகளின் அணிவகுப்பு கண்களுக்கு விருந்தாக அமையும் என்று பங்கேற்பாளர்களிடம் கூறப்பட்டிருந்தது. நிலத்தில் கட்டப்பட்டபடி ஒளிக்கூண்டுகளை வானில் மிதக்கச் செய்வய திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டத்தில் மாற்றம் இடம்பெற்றதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த பங்கேற்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நிஜ மெழுகுவத்திகளுக்குப் பதிலாக பங்கேற்பாளர்களுக்கு எல்ஈடி மெழுகுவத்திகள் வழங்கப்பட்டன.
மேலும், வானில் ஒளிக்கூண்டுகளை மிதக்கவிடும் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஒரு நுழைவுச்சீட்டின் விலை 50 வெள்ளி. நுழைவுச்சீட்டுக்கானப் பதிவுக் கட்டணம் அதில் அடங்காது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்களில் ஒருவரான திருவாட்டி ஷியர்மீ போட்டிஸ்டா, சுமார் 2,500 பேர் பங்கேற்றதாகவும் அவர்கள் தங்களுக்கான ஒளிக்கூண்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் ஃபேஸ்புக்கில பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பின்னர் அகற்றப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக 32 பயனீட்டாளர்கள் தங்களிடம் புகார் கொடுத்திருப்பதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“பொதுவாக நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமான ஒளிக்கூண்டுகளை வானில் மிதக்க விடுவதற்கான திட்டம் முன்னறிவிப்பின்றி கைவிடப்பட்டது குறித்து பயனீட்டாளர்கள் புகார் கொடுத்தனர்,” என்று சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.
“ஒளிக்கூண்டுகளை வானில் மிதக்க வைப்பதற்கான உரிமங்களையும் அனுமதியையும் பெறாதபோது ஏஷியன் கூச்சர் அண்ட் புட்டீக் நிறுவனம் அத்திட்டம் கைவிடப்பட்டதைப் பயனீட்டாளர்களிடம் தெரியப்படுத்தாமல் நிகழ்ச்சியை நடத்தியது தவறு. மாற்று ஏற்பாடாக இன்னொரு நிகழ்ச்சி நடடத்துவது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட தகவலும் தெளிவாக இல்லை,” என்று திரு யோங் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சூழ்நிலையில் முழுத் தொகையையும் பயனீட்டாளர்களிடம் திருப்பித் தரவேண்டும் என்றும் திரு யோங் சொன்னார். பாதிக்கப்பட்டோர் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தை அதன் இணையத்தளம் வாயிலாகவோ 62775100 என்ற எண்ணை அழைத்தோ தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.