வீடுகளின் தண்ணீர்ப் பயன்பாடு குறைந்தது

வீடுகளின் தண்ணீர்ப் பயன்பாடு குறைந்தது

2 mins read
afc933a9-cd4f-477b-af98-5fac277ded4f
ஜூரோங் லேக் கார்டன்சில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற நீர்ச் சிக்கன இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) இருவரும் பாலர் பள்ளி மாணவியுடன் உரையாடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூர் வீடுகளில் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது அதிகரித்த நீர்ப் பயன்பாடு, தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்ற ஆண்டு (2023) அது, ஒரு நாளில் ஒருவருக்கு 141 லிட்டராகப் பதிவானது. 2022ல் அது, 149 லிட்டராக இருந்தது.

முன்னதாக, 2018, 2019ஆம் ஆண்டுகளின்போது வீடுகளில் ஒருவர் பயன்படுத்திய நீரின் அளவு ஒரு நாளைக்கு 141 லிட்டராகப் பதிவானது. 2020, 2021ஆம் ஆண்டுகளில் கிருமிப் பரவலை முன்னிட்டுப் பெரும்பாலோர் வீட்டிலேயே தங்க நேரிட்டதால் அந்த அளவு அதிகரித்தது.

2020ஆம் ஆண்டில் அது, 154 லிட்டராகவும் 2021ஆம் ஆண்டில் 158 லிட்டராகவும் பதிவானது.

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன்கீழ், வீடுகளில் பயன்படுத்தப்படும் நீரின் அளவை, ஒரு நாளில் ஒருவருக்கு 130 லிட்டராகக் குறைப்பது இலக்கு.

வீடுகளில் அன்றாடம் 440 மில்லியன் கேலன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது சிங்கப்பூரின் அன்றாடப் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 45 விழுக்காடு.

2023ஆம் ஆண்டுக்கான நீர்ப் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம், மார்ச் 9ஆம் தேதி ஜூரோங் லேக் கார்டன்சில் நடைபெற்ற வருடாந்தர நீர்ச் சிக்கன இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் வெளியிட்டது.

கடந்த ஈராண்டுகளாக அதிகமானோர் வேலையிடங்களுக்கும் பள்ளிகளுக்கும் நேரில் செல்வதால் வீடுகளில் நீர்ப் பயன்பாடு குறைந்திருக்கக்கூடும் என்று கழகம் குறிப்பிட்டது.

அந்த நிகழ்ச்சிக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நீர்ப் பயன்பாட்டை கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குக் குறைப்பதில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகக் கூறினார்.

இது ஊக்கமளிப்பதாக இருந்தபோதும், 130 லிட்டர் என்ற இலக்கை எட்டுவதற்கு கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் உலக தண்ணீர் தினக் கொண்டாட்டம் மார்ச் மாதம் இடம்பெறும் வேளையில், வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதில் இந்த வருடாந்தர இயக்கம் கவனம் செலுத்துகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், வீட்டில் குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீருக்கு அப்பால் உணவு, உடை, அறைகலன் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர் குறித்தும் சிந்திக்கும்படி குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டார்.

அந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் உட்பட ஏறத்தாழ 2,000 பேர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்