ஜூரோங் தீவு முனையம் 2025க்குள் விரிவாக்கம் செய்யப்படும்

ஜூரோங் தீவு முனையம் 2025க்குள் விரிவாக்கம் செய்யப்படும்

1 mins read
ada0e0ba-5f09-49c0-9fe9-eb45288f302a
ஜூரோங் தீவு முனையம் ஓர் ஆண்டில் 300,000 கொள்கலன்களைக் கையாளும் அளவிற்கு 2025க்குள் விரிவாக்கம் செய்யப்படும். - படம்: பிஎஸ்ஏ

ஜூரோங் தீவு முனையத்தின் கொள்ளளவு 2025ஆம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.

ஜூரோங் தீவில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளுக்கான படகுப் போக்குவரத்து தொடர்பில் அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க அது உதவும்.

விரிவாக்கத்திற்குப்பின் அந்த முனையம் ஆண்டுக்கு 300,000 ‘டியுஇ’ எனப்படும் 20 அடி நீளக் கொள்கலன்களைக் கையாளும் என்று பிஎஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூரோங் தீவு முனையம் தற்போது அன்றாடம் அத்தகைய 400 கொள்கலன்களைக் கையாள்கிறது. அது, ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 146,000 கொள்கலன்களுக்குச் சமம்.

முனையத்தின் விரிவாக்கத் திட்டத்தில், ஜூரோங் தீவை நிர்வகித்து வரும் ஜேடிசி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக பிஎஸ்ஏ கூறியது.

ஜூரோங்கில் 100க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு, ரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றுக்கான மூலப்பொருள்களையும் உற்பத்தியான பொருள்களையும் லாரிகளில் ஏற்றிச் செல்வதன் மூலம் ஏற்படும் கரிம வெளியேற்றத்தில் 30 விழுக்காட்டைப் படகுப் போக்குவரத்து மூலம் குறைக்கலாம் என்று பிஎஸ்ஏ குறிப்பிட்டது.

சிங்கப்பூர் பசுமை எரிசக்தித் திட்டம் 2030க்கு ஏற்ப ஜூரோங் தீவை நீடித்த நிலைத்தன்மை எரிசக்தி, ரசாயன நடுவமாக உருமாற்ற இந்த விரிவாக்க நடவடிக்கை உதவும் என்பதை பிஎஸ்ஏ சுட்டியது.

குறிப்புச் சொற்கள்