தேசிய நெருக்கடியின்போது உடனடியாக வீடு தேவைப்படுவோருக்கு உதவ புதிய தளம்

2 mins read
7722a920-1e8f-4f57-a558-4833b6a5e45a
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் தேசிய அளவிலான நெருக்கடி நேர்ந்தால் அவ்வேளையில் உடனடியாக வீடு தேவைப்படுவோருக்கு உதவ தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தளத்தின் மூலம் வீடு தேவைப்படுவோர், தங்களின் வீட்டில் இடம் கொடுக்கத் தயாராய் இருப்போரைத் தொடர்புகொள்ளலாம்.

தேசிய வளர்ச்சி அமைச்சும் சொத்துச் சந்தைத் தளமான Mogul.sgயும் இணைந்து வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 9) அறிக்கை ஒன்றில் இதை அறிவித்தன. தேசிய அளவில் நெருக்கடி நேர்ந்தால் மட்டுமே இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்படும்.

நெருக்கடி காலத்தில் உடனடியாக வீடு தேவைப்படுவோருக்குத் திறந்துவிடப்படும் வீடுகள் குறித்த விவரங்களைப் புதிய தளத்தில் காணலாம். எவ்வளவு காலம் அத்தகைய வீடுகளில் வசிக்கலாம் என்பது போன்ற வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனைகளையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் போன்ற தேசிய அளவிலான நெருக்கடி காலங்களில் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. கிருமிப் பரவல் காலத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது சிங்கப்பூரர்கள் சிலர், மலேசியர்களைத் தங்கள் வீடுகளில் வசிக்க அனுமதித்ததை அறிக்கை சுட்டியது.

புதிய தளத்தை Mogul.sg உருவாக்கும். அதன் தற்போதைய இணையத்தளத்துடன் புதிய தளம் இணைக்கப்படும்.

Mogul.sgக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்கீழ், புதிய தளத்தின் செயல்பாட்டுச் செலவை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். அதோடு, தளத்தைப் பயன்படுத்துவோரின் நம்பகத்தன்மை போன்றவற்றை Mogul.sg உறுதிப்படுத்தவேண்டும்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் அரசாங்கத் துறைக்கும் இடையே சிங்கப்பூரில் இதுபோன்ற பங்காளித்துவம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“இத்தளம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேசிய வளர்ச்சி அமைச்சு குடிமக்களின் வீடுகளையும் அவசர வீடமைப்புத் தீர்வுகளில் சேர்த்துக்கொள்கிறது. ஹோட்டல்கள், அரசாங்க பங்களாக்கள் ஆகியவற்றுடன் குடிமக்களின் வீடுகளும் சேர்க்கப்படும்,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்