தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் ஐந்தாம் கட்டத்தில் உள்ள இரண்டு நிலையங்களைத் திறப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சிலரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் இறுதிக் கட்டமாக பிடோக் சவுத், சுங்கை பிடோக் ஆகிய நிலையங்களை இவ்வாண்டு திறக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக அவை அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் திறப்புப் பணிகள் 2026ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 5) போக்குவரத்து அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட நாடாளுமன்ற விவாதத்தின்போது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இதனை அறிவித்தார்.
அதனால் சில குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வட்டாரங்களில் சிலருக்குப் போதுமான பேருந்துச் சேவைகள் இல்லை என்றும் ஆக அருகாமையில் இருக்கும் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு நடந்து செல்ல 20 நிமிடங்கள் ஆகும் என்றும் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் கட்டப்படும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இடம்பெறும் ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கின.
2.2 கிலோமீட்டர் நீளம்கொண்ட டெளன்டெளன் பாதையின் நீட்டிக்கப்படும் பகுதிக்கான திறப்புப் பணிகளும் 2026ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாதை, எக்ஸ்போ நிலையத்தை சிலின், சுங்கை பிடோக் ஆகியவற்றுடன் இணைக்கும். அதன்படி, சுங்கை பிடோக், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், டெளன்டெளன் பாதைகளில் பயணம் செய்வோர் சேவை மாறிக்கொள்வதற்கான நிலையமாக விளங்கும்.
பேருந்துகளுக்கும் ரயில்களுக்குமான ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட முனையமும் 2026ஆம் ஆண்டில்தான் கட்டி முடிக்கப்படும்.
பிடோக் சவுத், சுங்கை பிடோக் நிலையங்களுக்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள், வேலை செய்வோர் உள்ளிட்ட 16 பேரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியது. அவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்படவிருப்பதால்தான் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் தாங்கள் வீடு வாங்கியதாக சிலர் கூறினர்.
சுங்கை பிடோக் பகுதியில் மூன்று பேருந்துச் சேவைகள் மட்டும் இயங்குவதால் தாங்கள் அவதிக்கு ஆளாவதாகவும் வேறு சிலர் குறிப்பிட்டனர்.

