நோயாளியை மானபங்கம் செய்த தாதிக்கு 16 மாதச் சிறை, பிரம்படி

2 mins read
c6bada53-ae08-4ea9-9555-85a1a0da1013
நோயாளியை மானபங்கம் செய்த தாதி ஐவன் லீ யி வாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் தாதியாக பணிபுரிந்த 35 வயது ஐவன் லீ யி வாங், நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த 26 வயது நோயாளியின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக அவரின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

லீமீது இரண்டு மானபங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணையின்போது அக்குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து அவர் குற்றவாளி என பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இக்குற்றத்தை லீ 2018ஆம் ஆண்டு புரிந்தார். அப்போது அவர் மருந்தக தாதி மேலாளர் பதவியில் இருந்தார் என்று கூறப்பட்டது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வயிற்றுக் கோளாறு காரணமாக மருந்தகத்திற்குச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த விசாரணையின்போது கூறினார்.

மேலும், அப்போதுதான் முதன்முதலில் தான் லீயை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக மருத்துவமனைக்குச் சென்றபோது லீயைச் சந்திக்கவில்லை என அவர் சொன்னார்.

அதைத் தொடர்ந்து, லீ தன் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, தமக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லீயின் இந்த நடவடிக்கை தனக்குச் சற்று வினோதமாக இருந்ததாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

அதே ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தான் மூன்றாவது முறையாக மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அன்றைய தினமே தனக்கு ‘எண்டோஸ்கோப்பி’ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குணமடையும் சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது இரண்டு சந்தர்ப்பங்களில் லீ தம்மை மானபங்கப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மற்ற தாதியரிடம் தான் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்