பாலஸ்தீன அகதிகளுக்கு மீண்டும் நிவாரணப் பொருள்களை அனுப்பத் திட்டமிடும் மெர்சி ரிலீஃப்

2 mins read
a8cada1f-e7be-4c19-b0f2-da89ae777a37
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதியுறும் பாலஸ்தீன அகதிகள் 4,800 பேருக்கு உணவு விநியோகிக்க மெர்சி ரிலீஃப் திட்டமிடுகிறது. - படம்: இபிஏ

மனிதநேய அமைப்பான மெர்சி ரிலீஃப், ரமலான் மாதத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கு மீண்டும் நிவாரணப் பொருள்களை அனுப்பத் திட்டமிடுகிறது.

மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, குவளைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையும், நோன்புத் துறப்பதற்கான உணவையும் விநியோகிக்க அது திட்டமிடுகிறது.

குவளைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், அத்தியாவசிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்பனவாகவும் ஊட்டச்சத்து மிக்கவையாகவும் இருக்கும்.

காஸாவின் ராஃபா நகரிலுள்ள பாலஸ்தீன அகதிகள் 4,800 பேருக்கு அவை வழங்கப்படும்.

குறிப்பாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதியுறும் குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் அவை விநியோகிக்கப்படும்.

வடகிழக்கு எகிப்திலுள்ள பாலஸ்தீன அகதிகள் 200 பேருக்கு நோன்பு துறப்பதற்கான உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கிடையே பிணைப்பையும் ஆதரவையும் வளர்ப்பதற்கும் அவர்களின் நலத்தை உறுதிசெய்வதற்கும் உதவுவது நோக்கம் எனக் கூறப்பட்டது.

நிவாரணப் பொருள்களை நேரில் வழங்கும் குழுவினரில் மெர்சி ரிலீஃப் அமைப்பின் தலைவர் சத்வந்த் சிங், இயக்குநர் குழு உறுப்பினர் சைருல் ஃபாஹ்மி, நிர்வாக இயக்குநர் முகமது ஆஷிக் ஆகியோரும் இடம்பெற்றிருப்பர்.

“புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவர்களுடன் இணைந்து அதில் பங்கேற்பதன்வழி சமூக ஆதரவைத் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று திரு சிங் கூறினார்.

“பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திப்பதன் மூலம் அவர்களின் தேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் நன்கு புரிந்துகொள்ளவும் நாம் வழங்கும் நிவாரணப் பொருள்கள் அந்தச் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றனவா என்பதை உறுதிசெய்யவும் முடியும்,” என்றார் அவர்.

கடந்த நவம்பர் மாதம், ‘ரஹ்மதான் லில் அலமின் அறக்கட்டளை’ காஸா சமூகத்தினருக்கு உதவி வழங்க $8 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையைத் திரட்டியது.

2023 அக்டோபர் 19 முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை அந்தத் தொகை திரட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்