ஜோகூர் பாருவிலுள்ள மலேசிய சோதனைச்சாவடி வளாகத்திற்கு நடந்து செல்வோருக்கான மூன்றாவது பாதை விரைவில் சோதனைமுறையில் திறக்கப்படவிருக்கிறது.
அந்தப் பாதை இரண்டு மாதங்களுக்குச் சோதிக்கப்படும்.
ஜோகூர் மாநில அரசாங்கம் பரிந்துரைத்த அந்த மூன்றாவது நடைபாதைக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக ‘த ஸ்டார்’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல், சாலைப் பாதுகாப்பு தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜோகூர் மாநில அரசாங்கம் முன்வைத்த அம்சங்களில் ஹக்கோ ஹோட்டலுக்கு அருகே அமையும் அந்த குறுக்குப்பாதையும் அடங்கும்.
ஏற்கெனவே, ஜாலான் ஜிம் கீ, ஜாலான் துன் அப்துல் ரஸாக் ஆகியவற்றில் இத்தகைய இரண்டு நடைபாதைகள் அமைந்துள்ளன.
ஜோகூர்-சிங்கப்பூர் கடற்பாலம் உலகின் ஆகப் பரபரப்பான, இரு நாடுகளை இணைக்கும் பாலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்றாடம் 350,000 பேர் அதனைக் கடந்து செல்கின்றனர். இருப்பினும் ஜோகூர் பாரு சோதனைச்சாவடி வளாகத்தின் வழியே நடந்துசெல்வோரின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.
நடந்துசெல்வோருக்கான குறுக்குப்பாதை, கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு மூடப்பட்டது. அதை மீண்டும் திறக்கவேண்டுமென கர்ப்பிணிகள் உட்பட நடந்துசெல்வோர் பலரும் கோரிக்கை வைத்தனர். அந்தப் பாதை மூடப்பட்டதால் அவர்கள் சுற்றுவழியில் 1.5 கிலோமீட்டர் நடக்க வேண்டியுள்ளது.
சோதனை அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு அந்தப் பாதையைத் திறந்து, அதனால் பிரச்சினைகள் ஏதும் எழுகின்றனவா என்று கண்காணிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
எல்லாம் சரியாக இருந்தால் அந்தப் பாதையை அதிகாரபூர்வ பாதையாக அரசிதழில் அறிவிக்க அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் முதல்வர் ஓங் ஹஃபிஸ் காஸியின் ஒப்புதலுக்குப் பிறகு மூன்றாவது நடைபாதை சோதனைமுறையில் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.