பயணி கால்களை இழப்பதற்கு காரணமான பேருந்து ஓட்டுநருக்கு 3 வாரச் சிறை

சிங்கப்பூர்-ஜோகூர் விரைவுப் பேருந்து ஒன்று, இறங்கும்போது கீழே விழுந்த பயணி ஒருவரின் கால்களில் ஏறியது. அதன் விளைவாக இரு கால்களையும் முழங்காலுக்கு மேலே துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அந்தப் பேருந்தை ஓட்டிய 45 வயது குணசீலன் ஆர். சுப்பிரமணியத்துக்கு மார்ச் 15ஆம் தேதி மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் விடுதலையான தேதியிலிருந்து ஈராண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்க அல்லது பெறவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், ஈராண்டுகளுக்கு சிங்கப்பூரில் எந்த மோட்டார் வாகனங்களையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்தபோது, கவனக்குறைவாகப் பேருந்தை ஓட்டி,74 வயதான திருவாட்டி துமினா சாபிக் என்ற மாதுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக மார்ச் 8ஆம் தேதி குணசீலன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி குணசீலன் அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது பயணிகள் இறங்குவதற்காக காலை 10.45 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி புறப்பாட்டுக் கூடத்தில் பேருந்து நின்றது.

கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த குணசீலன், திருவாட்டி துமினா பேருந்திலிருந்து இறங்குவதைக் கவனிக்கத் தவறிவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏரியல் டான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கும்போது கைப்பேசியில் அவர் பேசியதைக் கேட்டதாக மற்றொரு பயணியும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருந்தார்.

பேருந்திலிருந்து இறங்கிய கடைசிப் பயணியான திருவாட்டி துமினா, வாகனத்தின் பின்புற வெளிவாயிலுக்கு அருகில் உள்ள படிகளில் நின்று கொண்டிருந்தபோது அது மீண்டும் நகர்வதை உணர்ந்தார்.

பேருந்து திடீரென நகர்ந்தபோது அவரால் தனது உடலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் அவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தரையில் கிடந்த அவர், பேருந்தின் சக்கரங்கள் கால்கள் மீது ஓடுவதை உணர்ந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு உடம்பில் பல எலும்பு முறிவுகளும் காயங்களும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

வலது இடுப்பிலும் இடது கீழ்ப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. தசைகளும் எலும்புகளும் பாதிக்கப்பட்டதால் தோலும் திசுக்களும் சேதமடைந்தன.

“கால்கள் துண்டிப்புடன், கடுமையான காயங்களும் அவருக்கு ஏற்பட்டன,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

பேருந்துக் கதவுகளை மூடிவிட்டு ஓட்டத் தொடங்கியபோது, மேட்டின் மீது பேருந்து ஏறிச்சென்றதை தான் உணர்ந்ததாக குணசீலன் ஒப்புக்கொண்டார்.

குணசீலன் கவனக்குறைவாக நடந்துகொள்ளவில்லை என்றும் குமாரி துமினாவின் பாதுகாப்புக்கு அவர் ஆபத்தை விளைவித்திருக்க முடியாது என்றும் அவரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் ஏ. ரவி ஷங்கர் வாதிட்டார்.

வாகனத்தை எடுப்பதற்கு முன்னர் வாகனத்தின் இடது கண்ணாடி உள்ளிட்டவற்றைத் தாம் பார்த்ததாகவும் ஆனால் திருவாட்டி துமினாவைத் தாம் காணவில்லை என்றும் குணசீலன் கூறியிருந்தார்.

கவனக்குறைவான செய்கை மூலம் மற்றவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தினால் ஈராண்டுகள் வரை சிறை, $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!