68 வயது படகு உரிமையாளரைத் தாக்கியவருக்குச் சிறை

68 வயது படகு உரிமையாளரைத் தாக்கியவருக்குச் சிறை

2 mins read
31e108b7-9676-4691-b11a-7fdd00921050
சம்பவம் மரினா சவுத் பியரில் நிகழ்ந்தது. - படம்: கூகல் மேப்ஸ்

ஆத்திரத்தில் 68 வயது ஆடவர் ஒருவரைக் கையால் குத்திய படகோட்டிக்கு ஓராண்டு இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 34 வயது முகம்மது முன்ஸிர் முகம்மது ‌ஷாரில், வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார். தாக்கப்பட்ட சீ ட்ஸை சியா எனும் படகு உரிமையாளருக்கு நிரந்தரமாக உடற்குறை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது சீகேபி எனும் படகுப் போக்குவரத்து நிறுவனத்தில் முன்ஸிர் வேலை செய்தார்.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி காலை 8.51 மணிக்கு மரினா சவுத் பியர் முதல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது படகில் திரு சீ இருந்தார். அவ்வேளையில் தனது படகில் ஏதோ மோதியதை அவரும் படகோட்டியும் உணர்ந்தனர்.

முன்ஸிர் ஓட்டிக்கொண்டிருந்த படகு தங்களின் படகிற்கு அருகே இருந்ததை இருவரும் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் முன்ஸிர், திரு சீயின் முகத்தில் குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு சீ 2023ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவரது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. கைகளிலும் கால்களிலும் களைப்பு ஏற்பட்டது. கை விரல்கள் சிலவற்றில் உணர்ச்சி இல்லாதிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்சினைகள் தலைதூக்கியதையடுத்து திரு சீ முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்று அவரின் மருத்துவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்