ஏப்ரல் 1லிருந்து முதியோர் கீழே விழுவதைத் தடுக்கும் தொகுப்புத் திட்டம்

2 mins read
362d23af-0750-4b7b-8aaf-8578adca43dd
ஜெரோன் டெக்னோலஜி எனும் மூத்தோருக்கு உதவும் தொழில்நுட்பம் தொடர்பிலான பொருள்கள் ‘ஏஜ் பிளஸ் லிவிங் லேப்’ நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதியோர் கீழே விழுவதைத் தடுக்கும் தொகுப்புக்கு ஆர்வமுள்ள வீடுகள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) ஏற்பாட்டில் நடைபெறும் இத்திட்டம் மூத்தோரின் வாழும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

வீவக வீடுகளில் மூத்தோருக்கு உதவும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் அது சார்ந்த பொருள்களைப் பற்றியும் விளக்கமளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “அதிகமான முதியோரைக் கொண்டுள்ள சமூகத்தைத் தயார்ப்படுத்துதல் இங்கு அவசியமாகிறது. அதன் மூலம் அவர்கள் சுதந்தரமாக வாழ வழி வகுக்கலாம்,” என்றார்.

மூத்தோருக்கு உதவும் பொருள்களை வழங்கும் வர்த்தக நிறுவனங்களை வீவக தேர்வு செய்யும். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சமூக சேவை ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு லீ, மார்ச் 15ஆம் தேதி, ஈசூன் ஸ்திரீட் 81, புளோக் 839ல் உள்ள முதியோருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்குமான புதிய இடத்தைத் திறந்து வைத்தார்.

‘ஏஜ் பிளஸ் லிவிங் லேப்’ எனும் அழைப்படும் அந்நிலையத்தில் மூத்தோரின் பாதுகாப்புக்கு உதவும் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பார்க்கும் பராமரிப்பாளர்கள் மூத்தோருக்கு உதவும் தொழில்நுட்பம் தொடர்பிலான பொருள்களைப் பயன்படுத்தும் விதத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

“வரும் 2030ஆம் ஆண்டில் நான்கில் ஒருவர் 65 வயதைத் தாண்டிய முதியவராக இருப்பார். சமூக உதவி நிறுவனமான எஸ்ஜி அசிஸ்ட், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பலனாக இத்திட்டம் உருவாகியுள்ளது. மூப்படையும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சிஙகப்பூர் எப்படி தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு இத்திட்டம் ஓர் உதாரணம்.

“மூத்தோரின் பயன்பாட்டுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களை நமது மூத்த குடிமக்களும் அவர்களின் பராமரிப்பாளர்களும் எடுத்துப் பார்த்து, கையாண்டு சோதித்துப் பார்க்கும் வளநிலையம் இது. இந்தப் பொருள்களின் உதவியுடன் பராமரிப்பாளர்கள் முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு சற்று எளிமையாகிறது,” என்றும் தெரிவித்தார் அமைச்சர் லீ.

“தேசிய திட்டமான ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ திட்டத்துக்கு இது ஒத்துப்போகிறது. அத்திட்டம் முதியோர் துடிப்புடனும் சுதந்திரமாகவும் செயல்பட உதவுகிறது. இன்னும் அதிகமான துடிப்பான மூத்தோர் நிலையங்கள், துடிப்பான மூத்தோர் திட்டத்தின் (ஈஸ் 2.0) பல்வேறு மேம்பாடுகள் போன்றவை விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்