தொழில்நுட்பப் பிரச்சினைகளையும் ஐயங்களையும் தீர்த்துவைப்பதாகக் கூறி இடம்பெற்ற மோசடிகள் குறித்து இவ்வாண்டு குறைந்தது 78 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அத்தகைய மோசடிகளில் சிக்கியோர் குறைந்தது 6.7 மில்லியன் வெள்ளித் தொகையை இழந்துள்ளனர். காவல்துறை இந்த விவரங்களை வெளியிட்டது.
இதுபோன்ற மோசடிகளில் தங்களின் கணினிகள் உள்ளிட்ட சாதனங்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதிக்கப்பட்டோருக்கு ‘பாப்-அப்’ தகவல் வரும். பிரச்சினையைச் சரிசெய்வதற்கென்று சொல்லி அவர்களுக்கு சில தொலைபேசி எண்கள் வழங்கப்படும்.
அந்த எண்களைத் தொடர்புகொள்ளும்போது ஏமாற்றுக்காரர்கள் ஆப்பிள் அல்லது மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களைப் போல் நடித்து மோசடி மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய ஊடுருவிகளைப் பிடிக்க பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்பது போன்ற செயல்களை மோசடிக்காரர்கள் மேற்கொள்வதுண்டு.
அனுமதியின்றி தங்கள் வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனைகள் இடம்பெறும்போது பாதிக்கப்பட்டோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வர்.
மோசடிகளுக்கு ஆளாகமல் இருக்க தங்களின் கைப்பேசிகளில் ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்வது, இரட்டை மறைச்சொல் முறையைச் செயல்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
மோசடி குறித்த தகவல் தெரிந்தோர் 1800-255-0000 என்ற எண்ணை அழைத்தோ www.police.gov.sg/iwitness என்ற இணையத்தளம் வாயிலாகவோ காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். மோசடி குறித்த தகவல்களை அறிய www.scamalert.sg எனும் இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-711-6688 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

