காஸா சண்டைநிறுத்தம் தொடர்பில் ஜோர்தான், கத்தாருடன் சிங்கப்பூர் இணக்கம்

காஸா சண்டைநிறுத்தம் தொடர்பில் ஜோர்தான், கத்தாருடன் சிங்கப்பூர் இணக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Mar 2024 - 11:25 am

2 mins read

அம்மான், ஜோர்தான்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது மத்திய கிழக்குப் பயணைத்தின்போது, ஜோர்தான் மற்றும் கத்தாரின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மூன்று அமைச்சர்களும் காஸாவில் மனிதநேய அடிப்படையில் உடனடியாகச் சண்டைநிறுத்தம் அமலுக்கு வரவேண்டியதன் தேவை தொடர்பில் இணக்கம் கண்டுள்ளனர்.

அம்மானில் உள்ள ஜோர்தானிய வெளியுறவு அமைச்சில் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜோர்தானிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அய்மான் சஃபாடியை மார்ச் 16ஆம் தேதி சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில், காஸாவிற்கு நிவாரண உதவிப்பொருள்களை வழங்குவதற்கான கூடுதல் வழிகள் குறித்து ஆராயவேண்டும் என்னும் அம்சத்தில் இரு அமைச்சர்களும் இணக்கம் கண்டனர்.

மேலும், சிங்கப்பூர் ஆகாயப்படை தற்போது காஸாவில் மனிதநேய உதவிகளை வழங்குவதன் தொடர்பில் இருதரப்பும் அணுக்கமாகப் பணியாற்றுவதற்கு, சிங்கப்பூருக்கும் ஜோர்தானுக்கும் இடையில் நிலவும் வலுவான இருதரப்பு உறவுகளே காரணம் என்பதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

திரு சஃபாடியும் தாமும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காஸா நிலவரம் குறித்தும், இரு நாடுகளும் இணைந்து காஸாவில் பட்டினியால் அவதியுறுவோருக்கு உதவுவதற்கு எவ்வாறு பணியாற்றலாம் என்பது குறித்தும் கலந்துபேசியதாக டாக்டர் விவியன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“காஸாவிற்கான சிங்கப்பூரின் மனிதநேய உதவியை விநியோகிப்பதற்கு ஜோர்தான் விரைவாக ஏற்பாடு செய்ததற்கு திரு சஃபாடிக்கு நான் நன்றி கூறினேன்,” என்றார் அவர்.

முன்னதாக, சிங்கப்பூரிலிருந்து ஜோர்தான் செல்லும் வழியில் மார்ச் 15ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹா சென்ற டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்தார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது), மார்ச் 15ஆம் தேதி கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்தார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது), மார்ச் 15ஆம் தேதி கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்தார். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

காஸா நிலவரம், மத்திய கிழக்கில் அதனால் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள், வட்டார மேம்பாடுகள் போன்றவை குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

காஸாவில் மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக உடனடியாகச் சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்பதன் தொடர்பில் தாங்கள் இணக்கம் கண்டதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

காஸா சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுகள் மார்ச் 17ஆம் தேதி தோஹாவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காஸாசண்டை நிறுத்தம்சிங்கப்பூர்ஜோர்தான்கத்தார்