காஸாவிற்கான சிங்கப்பூரின் உதவிப்பொருள்கள் ஜோர்தான் சென்றடைந்தன

2 mins read
விரைவில் வான்வழி விநியோகத்தைத் தொடங்கவிருக்கிறது சிங்கப்பூர் ஆகாயப்படை
5697fc00-f81c-4ffb-a613-44c1b811bb48
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடமிருந்து இரண்டாவது), தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (இடமிருந்து மூன்றாவது) இருவரும் மார்ச் 17ஆம் தேதி, ஜோர்தானில் உள்ள மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகாயப்படைத் தளத்தில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுடன் உரையாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அம்மான்: காஸா மக்களுக்கு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அனுப்பிய மனிதநேய உதவிப்பொருள்கள் ஜோர்தான் சென்றடைந்துள்ளன.

உணவுப் பொட்டலங்கள், அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் போன்றவற்றை சிங்கப்பூர் அனுப்பியுள்ளது.

காஸாவில் சிங்கப்பூர் ஆகாயப்படை (ஆர்எஸ்ஏஎஃப்), விரைவில் உதவிப்பொருள்களை வான்வழி விநியோகிக்கும் பணியைத் தொடங்கவிருக்கிறது.

அமெரிக்கா, ஜோர்தான், எகிப்து, ஜெர்மனி போன்ற அரபு, மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர், பஞ்சத்தால் அவதியுறும் காஸா மக்களுக்கு உதவிப்பொருள்களை அவ்வாறு வான்வழி விநியோகிக்கும்.

காஸா மக்களின் தேவைகள் குறித்து ஜோர்தானுடன் அணுக்கமாகக் கலந்தாலோசித்த பிறகு மனிதநேய உதவிப்பொருள்கள் அனுப்பப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் தற்காப்பு அமைச்சும் மார்ச் 17ஆம் தேதி தெரிவித்தன.

சிங்கப்பூர் ஆகாயப்படை மனிதநேய உதவிப் பொருள்களை விநியோகிக்கும் பணிக்காக அதன் வீரர்கள் 69 பேருடன், இரண்டு விமானங்களை மார்ச் 15ஆம் தேதி அனுப்பியது.

மனிதநேய உதவிகள் தொடர்பில் மத்திய கிழக்குப் பங்காளித்துவ நாடுகளுடனும் சிங்கப்பூரிலுள்ள பங்காளித்துவ அமைப்புகளுடனும் தொடர்ந்து கூட்டாகச் செயலாற்றவிருப்பதாக இரு அமைச்சுகளும் தெரிவித்தன.

காஸாவில் சண்டை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரவேண்டுமென்றும் மனிதநேய உதவிகள் பாதிக்கப்பட்ட காஸா மக்களைப் பாதுகாப்பாகச் சென்றடைய வகைசெய்யும்படியும் சிங்கப்பூர் வலியுறுத்துவதாக அமைச்சுகள் குறிப்பிட்டன.

சிங்கப்பூரின் உதவிப்பொருள்கள் ஜோர்தான் சென்றடைந்ததைக் குறிக்கும் விதமாக அந்நாட்டுத் தலைநகர் அம்மானிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகாயப்படைத் தளத்திற்கு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமதும் சென்றிருந்தனர்.

ஜோர்தானிய ஆயுதப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஹிஷாம் அல் ஹைத்தியும் ஜோர்தான் ஹேஷ்மைட் அறநிறுவனத் தலைமைச் செயலாளர் ஹுசேன் அல் ஷெப்லியும் அவர்களை வரவேற்றனர்.

காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்களை வழங்க உதவியதற்கும் வான்வழி விநியோகத்திற்கு சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்ததற்கும் ஜோர்தானுக்குச் சிங்கப்பூர் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீதான சிங்கப்பூரின் அக்கறையை வெளிப்படுத்தும் இச்செயலில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆகாயப்படை அதிகாரிகளுக்கும் அவர் நன்றி கூறினார்.

2023 நவம்பரில் சிங்கப்பூர் காஸாவிற்கு இரண்டுமுறை உதவிப் பொருள்களை அனுப்பியது.

காஸாவிற்கு நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் உதவிப்பொருள்களை அனுப்புவதில் உலக நாடுகள் முனைந்துள்ளன. கடல் வழியாகவும் வான்வழியாகவும் உதவிப்பொருள்கள் அனுப்புவதற்கு ஆகும் செலவு, சிக்கல்கள் ஆகியவற்றைச் சுட்டும் உதவிக்குழுக்கள், நிலைமை மோசமடையாமல் பாதுகாக்க நிரந்தரமான சண்டை நிறுத்தமும் லாரிகள் மூலம் உதவிப்பொருள்களை வழங்குவதும் உதவும் என்கின்றன.

குறிப்புச் சொற்கள்