தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூதாட்டம் வேண்டாம்; சிங்கப்பூரில் உள்ள சீன குடிமக்களுக்கு வேண்டுகோள்

2 mins read
45df7d62-529f-4617-84f0-18d4bceed306
வேறு நாடுகளுக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபடுவது சீனாவின் சட்டத்திற்கு எதிரானது என்று சிங்கப்பூரில் செயல்படும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் செயல்படும் சீன தூதரகம் இங்குள்ள அதன் குடிமக்களை சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வேறு நாடுகளுக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபடுவது சீனாவின் சட்டத்திற்கு எதிரானது என்றும் அது கூறியது.

‘வீ சாட்’ சமூக ஊடகம் வழி சீன தூதரகம் மார்ச் 18ஆம் தேதி இது குறித்து அறிக்கை வெளியிட்டது.

“வெளிநாடுகளில் சூதாட்டக் கூடங்கள் சட்ட அனுமதி பெற்று இயங்கலாம், ஆனால் அதில் சீன மக்கள் கலந்துகொண்டு விளையாடுவது பெய்ஜிங்கின் சட்டங்களை மீறும் செயலாகக் கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் சூதாட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுவர்களுக்கு தூதரகம் எந்தவித பாதுகாப்பும் தராது என்றும் தெளிவுபடுத்தியது.

சூதாட்டத்தில் ஈடுபடுவர்கள் கடன், நிதிச்சுமை, குடும்பங்களில் பிரச்சினை போன்ற சிக்கலில் சிக்கக்கூடும் என்றும் தூதரகம் தெரிவித்தது.

எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் மோசடி, கள்ள பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, ஆட்கடத்தல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அது கூறியது.

சீன குடிமக்கள் யாரேனும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக தங்களுக்குகோ சிங்கப்பூர் காவல்துறைக்கோ தகவல் கொடுக்குமாறு தூதரகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

சீனாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான குலுக்கல் சீட்டுகளை மட்டுமே வாங்க அனுமதி. அங்கு சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவ்வில் சூதாட்டக் கூடங்கள் உள்ளன. அங்கு சூதாடத் தடை இல்லை.

இதற்கு முன்னர் மலேசியா, இத்தாலி, இலங்கை, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் இதேபோன்று அதன் குடிமக்களை சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மேலும் சீனா எல்லைத் தாண்டிய சூதாட்ட செயல்களைக் குறைக்க தென்கிழகாசிய நாடுகளுடன் கூட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்