தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூர் நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுக்கலாம்’

2 mins read
cc357225-2235-4674-aa4b-484f87fc123e
சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை தங்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுக்கலாம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

மேகக் கணிமை, தரவு நிலையங்கள் போன்றவற்றை மேம்படுத்தி மின்னிலக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் சிங்கப்பூர் நிறுவனங்களின் இணையப் பாதுப்பையும் கவனிக்கவேண்டும்; அது, மக்கள் பயன்படுத்தும் இணையச் சேவைகளிலும் அவற்றின் மூலம் வரும் அவர்கள் பெறும் அனுபவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதற்குக் காரணம் என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

துமாசெக் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இஸ்தாரி புதன்கிழமையன்று (மார்ச் 20) ஏற்பாடு செய்த மாநாட்டில் அவர் பேசினார்.

உள்ளூர் நிறுவனங்களிடையே போதுமான அளவில் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்தது. 23 தொழில்துறைகள், ஏழு நன்கொடைத் துறைகள் ஆகியவற்றைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை, கருத்தாய்வுக்கு முந்தைய ஓராண்டு காலத்தில் குறைந்தது ஓர் இணையப் பாதுகாப்புப் பிரச்சினையை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தரவு மற்றும் சேவைகளைக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திறந்துவிடுவது, மென்பொருள் வடிவத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்சங்களில் நிறுவனங்கள் எந்த அளவிற்கு இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதைக் கருத்தாய்வு ஆராய்ந்தது. ஒவ்வோர் அம்சத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சராசரியாக தேவையான நடவடிக்கைகளில் 70 விழுக்காட்டை எடுத்திருக்கின்றன.

இது ஊக்கம் தரும் புள்ளி விவரம் என்றாலும் சில நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது போதாது என்றார் திருவாட்டி டியோ.

“போதுமான நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் தேவையற்ற இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடும்,” என்றும் அவர் எச்சரித்தார்.

“கருத்தாய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் மூன்றில் ஒன்றுதான் குறைந்தது மூன்று அம்சங்களில் தேவையான எல்லா இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலை இன்னும் மேம்படலாம்,” என்று திருவாட்டி டியோ அறிவுரை வழங்கினார்.

கருத்தாய்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்