பிஞ்சு மகளைக் கொலை செய்வதாக மிரட்டிய ஆடவருக்குச் சிறை

பிஞ்சு மகளைக் கொலை செய்வதாக மிரட்டிய ஆடவருக்குச் சிறை

1 mins read
426dba95-d376-4e64-b916-18042f25edbb
படம்: - பிக்சாபே

மனைவியுடன் சண்டையிட்டு, மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அக்குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஆடவருக்கு மார்ச் 21ஆம் தேதி மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 24 வயது ஆடவர் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இவ்வழக்குடன் தொடர்பில்லாத சம்பவத்தில், கணினியைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு (2023) மே 14ஆம் தேதி அவருக்கும் அவரது 21 வயது மனைவிக்கும் சண்டை மூண்டது.

மகள் தூங்கிக்கொண்டிருக்கும்போது கைத்தொலைபேசியில் ஆடவர் உரக்கப் பேசியதால், வாயை மூடும்படி மனைவி கூறியதாகவும் அதில் ஆத்திரமுற்ற ஆடவர் கத்தியைக் காட்டி மனைவியை மிரட்டியதுடன் கழுத்தை நெரித்ததாகவும் தெரிகிறது.

மகளுடன் தன் அம்மா வீட்டிற்குச் செல்லவிருப்பதாக மனைவி கூறவே, அப்படிச் சென்றால் மகளைக் கொன்றுவிடப் போவதாக மிரட்டிய ஆடவர் மனைவியை இருமுறை கன்னத்தில் அறைந்தார்.

தப்பிச் சென்ற மனைவி அருகில் உள்ள புளோக்கில் குடியிருக்கும் தன் தாயாரிடம் நடந்ததைக் கூறினார். மருமகன் குழந்தையை ஒப்படைக்க மறுத்ததால் அந்தத் தாயார் காவல்துறையில் புகாரளித்தார்.

அதிகாரிகள் சென்றபோது குழந்தையின் உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதுமில்லை. குழந்தை அதன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு ஆடவரின் பெயர் உட்பட மேல்விவரங்களை வெளியிட அனுமதியில்லை.

குறிப்புச் சொற்கள்