‘லாபநோக்கமற்ற தனியார் மருத்துவமனை சமச்சீரான நிலையைக் காண வேண்டும்’

‘லாபநோக்கமற்ற தனியார் மருத்துவமனை சமச்சீரான நிலையைக் காண வேண்டும்’

2 mins read
48d2b86c-04d0-4f43-a49e-ed5207a4b9a5
மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜேம்ஸ் லாம். - The Straits Times

மவுண்ட் அல்வேர்னியா, சிங்கப்பூரின் ஒரே லாபநோக்கமற்ற தனியார் மருத்துவமனை.

நோயாளிகளுக்குக் கட்டுப்படியான விலையில் மருத்துவச் சேவைகளை வழங்கும் அதே சமயம் மருத்துவமனையின் சேவைகளை விரிவாக்கத் தேவையான பணத்தைத் திரட்ட வேண்டிய கட்டாயமும் அதற்கு உள்ளதாக மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜேம்ஸ் லாம் கூறினார்.

மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனை 2023ஆம் ஆண்டில் ஐக்கோன் புற்றுநோய் நிலையத்தையும் மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்துக்காக செயின்ட் ஆன் தாய், சேய் நிலையத்தையும் திறந்தது.

உபரி வருமானத்தைப் பயன்படுத்தி தனக்குத் தேவையானவற்றைப் பெற மவுண்ட் அல்வேர்னியா முயன்று வருகிறது.

சுகாதாரப் பராமரிப்புத்துறை எதிர்நோக்கும் குறைபாடுகள் பற்றி இன்னும் கவனிக்கப்படவில்லை என்றார் டாக்டர் லாம்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் வெளிநோயாளிச் சிகிச்சை பெறுவோருக்கும் மனநலச் சேவைகளை வழங்கும் சாத்தியக்கூறுகளை மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனை ஆராய்ந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, பொது, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூப்படையும் மக்கள்தொகை காரணமாக சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

சிங்கப்பூரில் 90 விழுக்காடு மருத்துவமனை நோயாளிகளைப் பொது மருத்துவமனைகள் கையாள்வதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

போதிய காப்புறுதித் திட்டத்தைக் கொண்டுள்ள, கட்டணக் கழிவுகள் அவ்வளவாகத் தேவைப்படாதோர் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த கட்டணப் பிரிவின்கீழ் பராமரிப்புச் சேவைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அமைச்சர் ஓங் ஆலோசனை வழங்கினார்.

இதை மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனை எதிர்பார்க்கவில்லை என்றார் டாக்டர் லாம்.

இன்னொரு லாபநோக்கமற்ற தனியார் மருத்துவமனை தனக்குப் போட்டியாக இருக்கக்கூடும் என்றபோதிலும் அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்த அது உதவக்கூடும் என்று டாக்டர் லாம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்