புடாபெஸ்ட்: ஹங்கேரி குகையில் சிக்கிய 32 வயது சிங்கப்பூரரை 29 வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு பாதுகாப்பாக மீட்டது. அந்த சிங்கப்பூரர் மார்ச் 22ஆம் தேதி வழிகாட்டியின் உதவியுடன் அந்தக் குகைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டு, குகையில் இருந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டார்.
மார்ச் 22ஆம் தேதி நண்பகல் வாக்கில் தனியார் அமைப்பு ஒன்றுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஹங்கேரி குகை மீட்புக் குழுவினர் அங்கு சென்று அவரைப் பத்திரமாக மீட்டதாக அக்குழுவின் தலைவர் மிக்லோஸ் நைர்ஜெஸ் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்தார்.
புடாபெஸ்ட் நகருக்கு அருகேயுள்ள அந்தக் குகைக்கு மீட்புக் குழுவினர் மார்ச் 22ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றுசேர்ந்தனர். சேர்ந்ததும் முதல் வேலையாக மருத்துவர் ஒருவரையும் மருத்துவ உதவியாளர் ஒருவரையும் குகைக்குள் அனுப்பி காயமடைந்தவருக்கு சிகிச்சையளித்தனர்.
சிங்கப்பூர் ஆடவர் குகைக்குள் ஏறக்குறைய 40 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்தார். அந்த ஆடவரை ஸ்ட்ரெச்சரில் கொண்டுவர வேண்டியிருந்தது. ஆனால், ஸ்ட்ரெச்சரைக் கொண்டு செல்வதற்கான வழி ஏற்புடையதாக இல்லை. கரடுமுரடான, குறுகலான பாதையாக அது இருந்தது. அதையடுத்து மீட்புக் குழுவினர் 400 மீட்டர் முதல் 500 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
மேலும், குகையில் நீண்ட கயிற்றுப்பாதை அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் குகையில் இருந்து சிங்கப்பூரரை வெளியே கொண்டு வந்தனர் என்று டாக்டர் நைர்ஜெஸ் மீட்புப்பணி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.

