பங்களா, ஆடம்பர அடுக்குமாடி வீட்டு விற்பனை சரிவு

1 mins read
4c854d91-ecd8-4e17-84c3-2bc99f88c992
செந்தோசா கோவ் வீடுகள் சென்ற ஆண்டு (2023) குறைவான எண்ணிக்கையில் விற்பனையாயின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், உயர்ரக (ஜிசிபி) பங்களாக்களின் விற்பனை சரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றின் விலையில் மாற்றமில்லை என்று சொத்துச் சந்தை, முதலீட்டு நிறுவனமான ‘சிபிஆர்இ’ குழுமம், மார்ச் 26ஆம் தேதி தெரிவித்தது.

2023ன் பிற்பாதியில் ஒன்பது ஜிசிபி பங்களாக்கள் கைமாறின. அவற்றின் மொத்த விலை $202.05 மில்லியன். சென்ற ஆண்டின் முற்பாதியுடன் ஒப்பிடுகையில் இது 64.9 விழுக்காடு குறைவு.

சென்ற ஆண்டு மொத்தம் 23 ஜிசிபி பங்களாக்கள் விற்பனையாயின. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது.

அதிகரிக்கும் வட்டி விகிதம், உலகளாவிய பொருளியல் நிச்சயமற்றதன்மை, 2023ல் தொடங்கப்பட்ட பணமோசடி ஒழிப்பு நடவடிக்கை ஆகியவற்றால் இத்தகைய பங்களாக்களின் விற்பனை சரிந்ததாக ‘சிபிஆர்இ’ குழுமம் கூறியது.

2023ன் இரண்டாம் பாதியில் 63 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் விற்கப்பட்டன. ஒப்புநோக்க, 2023ன் முற்பாதியில் 92 வீடுகள் விற்பனையாயின.

சென்ற ஆண்டு முழுவதும் கணக்கிட்டால், இத்தகைய 155 அடுக்குமாடி வீடுகள் விற்பனையாயின. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது.

சிங்கப்பூரில் வர்த்தக வாய்ப்புகள் அதிகமென்பதால், நீண்டகால அடிப்படையில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கான தேவை அதிகமாகவே இருக்குமென்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்