வீவக மறுவிற்பனை வீட்டு விலை 1.7% கூடியது

1 mins read
5153dfc5-a471-4bf7-a291-a5ba9ed917a0
2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல், தொடர்ந்து 16வது காலாண்டாக வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 1.7 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல், தொடர்ந்து 16வது காலாண்டாக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்துள்ளதாக ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட்ட முன்னோடி அறிக்கையில் கழகம் குறிப்பிட்டுள்ளது.

வீவக மறுவிற்பனை வீட்டுச் சந்தை நிலைப்படுவதாகக் கழகம் கூறியது. 2023ல் மறுவிற்பனை வீடுகளின் விலை 4.9 விழுக்காடு உயர்ந்தது. 2022ஆம் ஆண்டில் அது 10.4 விழுக்காடாகவும் 2021ல் 12.7 விழுக்காடாகவும் பதிவானதைக் கழகம் சுட்டியது.

நிச்சயமற்ற பொருளியல், அதிகரிக்கும் வட்டி விகிதம் ஆகியவற்றால் குடும்பங்கள் வீடு வாங்கும்போது, தொடர்ந்து கவனமாகச் செயல்பட வேண்டும் என்று கழகம் கூறியது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 6,928 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின. சென்ற ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.5 விழுக்காடு அதிகம்.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 100,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று அதிகாரிகள் உறுதிகூறியுள்ளனர். பிப்ரவரி மாத நிலவரப்படி, 67,000க்கு மேற்பட்ட பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் ஏறக்குறைய 6,800 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 15ஆம் தேதிக்குள் தகுதிக் கடிதத்திற்கு விண்ணப்பிக்கும்படி கழகம் ஆலோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்