ஜப்பானில் மீட்டுக்கொள்ளப்பட்ட ‘ரெட் ரைஸ் யீஸ்ட்’ : சிங்கப்பூரில் விற்கப்படவில்லை

ஜப்பானில் மீட்டுக்கொள்ளப்பட்ட ‘ரெட் ரைஸ் யீஸ்ட்’ : சிங்கப்பூரில் விற்கப்படவில்லை

1 mins read
07028e63-790b-447f-b860-0ec1b8602879
ஜப்பானில் அந்த ஊட்டச்சத்துப் பொருள்களால் 5 பேர் மாண்டதாகவும் 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: கோபயாஷி ஃபார்மசியூட்டிகல்

ஜப்பானில் அண்மையில் மீட்டுக்கொள்ளப்பட்ட ‘ரெட் ரைஸ் யீஸ்ட்’ உணவுப்பொருள்கள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் ஏப்ரல் 1ஆம் தேதி தெரிவித்தது.

கோபயாஷி ஜப்பானிய மருந்துப்பொருள் நிறுவனத்தின் மூன்று ஊட்டச்சத்துப் பொருள்கள் அவ்வாறு மீட்டுக்கொள்ளப்பட்டன. கொழுப்புச்சத்தின் அளவைக் குறைக்க உதவுவதாக அவை விற்பனை செய்யப்பட்டன.

அந்தப் பொருள்களைப் பயன்படுத்திய ஐவர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதையடுத்து அவை மீட்டுக்கொள்ளப்பட்டன.

“கோபயாஷி நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வருகிறது. சிங்கப்பூரில் உள்ள அதன் கிளையுடன் தொடர்ந்து பணியாற்றி, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று ஆணையம் கூறியது.

பாதுகாப்பு குறித்த கவலை ஏதும் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு அதுகுறித்துத் தகவல் அளிக்க அது உறுதியளித்தது.

மருத்துவச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டோர் எந்தவொரு ஊட்டச்சத்துப் பொருளையும் பயன்படுத்தத் தொடங்குமுன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என ஆணையம் நினைவுறுத்தியது.

ஊட்டச்சத்துப் பொருளை உட்கொண்ட பிறகு உடல்நிலை சரியில்லாமற்போனால் உடனடியாக அதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகும்படி அது ஆலோசனை கூறியது.

குறிப்புச் சொற்கள்