தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரிமையாளருக்குத் தெரியாமல் வாடகைதாரர்களாகப் பதிவான இருவர்

2 mins read
0b45eb40-28a4-4e79-a1b1-e9a53aa2028a
மனிதவள அமைச்சிக் குறுந்தகவலின் மூலம் திரு லிம்முக்கு இத்தகவல் தெரிய வந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

தனக்குத் தெரியாமல் தனது கூட்டுரிமை வீட்டில் வெளிநாட்டு ஊழியர் இருவர் வாடகைக்கு இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டதை மனிதவள அமைச்சிடமிருந்து குறுந்தகவலின் மூலம் திருவாட்டி லிம்முக்குத் தெரிய வந்தது.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தனது வீட்டை அவர் ஏற்கெனவே ஒரு ஜப்பானிய தம்பதிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். திருவாட்டி லிம், அவரின் சொத்து முகவர், அத்தம்பதி ஆகிய மூன்று தரப்பினருக்கும் அந்த வெளிநாட்டு ஊழியர்கள் வாடகைதாரர்களாகப் பதிவுசெய்யப்பட்டது தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து 59 வயது திருவாட்டி லிம் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். காவல்துறையும் அதை உறுதிப்படுத்தியது.

“இதனால் எனக்குத் தூக்கம் போனது. அந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டாலோ கடன் முதலைகளிடமிருந்து கடன் பெற்றிருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் என்னைத்தான் தேடி வருவர்,” என்றார் செயலாளராகப் பணிபுரியும் திருவாட்டி லிம்.

“எனது வாடகைதாரர்களுக்கும் இதைப் பற்றி ஏதும் தெரியாதது நிலைமையை மேலும் மோசமாக்கும். எதிர்பாரா வகையில் கடன் முதலைகளோ காவல்துறையினரோ வீடு தேடி வந்தால் அவர்கள் பதறிப்போவர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாடகைதாரர்களாக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலான ஐயங்களைத் தீர்த்துவைக்கும் எஃப்டபிள்யுடிஇஎஸ் எனும் முறையில் தகவல்களைச் சரிபார்க்குமாறு மனிதவள அமைச்சிடமிருந்து திருவாட்டி லிம்முக்குக் குறுந்தகவல் வந்தது.

இவ்வாண்டு பிப்ரவரி 29, மார்ச் 6 ஆகிய தேதிகளில் அந்த வெளிநாட்டு ஊழியர்கள் திருவாட்டி லிம்மின் வாடகைதாரர்களாகப் பதிவுசெய்யப்பட்டது தெரியவந்தது. இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் அவர்களைப் பதிவுசெய்தன.

இதேபோல் மற்ற வெளிநாட்டு ஊழியர்களும் தனது வீட்டு முகவரியைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க திருவாட்டி லிம் உடனே நடவடிக்கை எடுத்தார். மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் வீட்டு உரிமையாளர்கள் அவ்வாறு செய்ய வழி உள்ளது.

இதேபோல் மற்ற அரசாங்க, தனியார் வீட்டு உரிமையாளர்களிடமிருந்தும் புகார் வந்ததா என்று கேட்கப்பட்டதற்கு மனிதவள அமைச்சு பதிலளிக்கவில்லை.

2018ஆம் அண்டு டிசம்பர் மாதம் எஃப்டபிள்யுடிஇஎஸ் முறை தொடங்கப்பட்டது. அதன் மூலம் தங்களின் வீட்டு முகவரி தவறாகப் பயன்படுத்தப்பட்டதை உணர்ந்ததாக 489 வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர் என்று 2019ஆம் ஆண்டு மே மாதம் பிஸ்னஸ் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அம்முறை தொடங்கப்படுவதற்கு முன்பு ஆண்டுதோறும் 30க்கும் குறைவானோரே புகார் கொடுத்தனர்.

எனினும், இப்பிரச்சினை எழாமல் இருக்க மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இருக்கலாம் என்று வெளிநாட்டு ஊழியர் நலனுக்குக் குரல் கொடுக்கும் ஹோம் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்