மதுபோதையில் கார் ஓட்டியதாக முன்னாள் தேசிய விளையாட்டாளர் மீது குற்றச்சாட்டு

மதுபோதையில் கார் ஓட்டியதாக முன்னாள் தேசிய விளையாட்டாளர் மீது குற்றச்சாட்டு

1 mins read
13b58cac-57ba-43dc-90c8-951601e6ca99
மதுபோதையில் கார் ஓட்டியதாக நம்பப்படும் டோ சிங் ஹுவாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் இருந்தபடி அக்கறை, கவனமின்றி வாகனம் ஓட்டியதாக வலைப்பந்து விளையாட்டாளர் ஒருவர் மீது வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இச்சம்பவம் சென்ற ஆண்டு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள 29 வயது டோ சிங் ஹுவாங் சென்ற ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார்.

நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அதிகாலை 4.37 மணியளவில் ஸ்காட்ஸ் ரோட்டை நோக்கிய பேட்டர்சன் ரோட்டில் டோ கார் ஓட்டிக்கொண்டிருந்தார்; அப்போது அவரின் 100 மில்லிலிட்டர் மூச்சுக்காற்றில் 69 மைக்ரோகிராமுக்குக் குறையாமல் மதுபானம் கலந்திருந்ததாக நம்பப்படுகிறது.

ஒருவர் வாகனம் ஓட்டும்போது 100 மில்லிலிட்டர் மூச்சுக்காற்றில் 35 மைக்ரோகிராமுக்கு மேல் மதுபானம் கலந்திருக்கக்கூடாது.

அதோடு, டோ பிடிபட்டபோது அவர் கட்டுப்பாடின்றி காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. அவரின் கார் சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்பின் மீது ஏறி, சாலைக் குறிப்பு ஒன்றின் மீது மோதியதாகச் சொல்லப்படுகிறது.

மே மாதம் 30ஆம் தேதியன்று டோ தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்