தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய திட்டம்

3 mins read
5726cca9-6a51-426f-a636-f15bb5e6ecd9
‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருபன் தனராஜன். - படம்: சிங்கப்பூர் விளையாட்டு மன்றம்

ஆற்றல்மிக்க இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, தொடக்க நிலையிலிருந்தே அவர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டத்துக்கு 48 இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’, ‘ஸ்பெக்ஸ்’ உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், அத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

பிரபல திடல்தட வீராங்கனை சாந்தி பெரேரா உட்பட சிங்கப்பூருக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர்கள் பலரும் ‘ஸ்பெக்ஸ்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற வீரர்களே என்பதைச் சுட்டிய அமைச்சர், தற்போது அடுத்த கட்டத்துக்குச் செல்ல முற்படும் வீரர்களுக்கு ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டம் பெரும் பலமாக அமையும் எனக் கூறினார்.

பயிற்சிக்கான செலவு, மருத்துவ ஆதரவு உள்ளிட்ட இதர தேவைகள் குறித்து விளையாட்டு வீரர்கள் கவலைப்படாமல், பயிற்சியில் முழுக் கவனம் செலுத்த அரசு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கும்,” என்றார் திரு டோங்.

சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் சார்பில் கடந்த 2013 முதல் வழங்கப்படும் இந்த உபகாரச் சம்பளம், இவ்வாண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பத்து விளையாட்டு வீரர்களுடன், மொத்தம் 26 உயர் திறன் விளையாட்டுகளைச் சேர்ந்த 103 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் வீரர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு புதிதாக, தேசிய அளவில் பங்கேற்றுவரும், அனைத்துலக அளவில் பங்கேற்கப் பயிற்சி பெற்றுவரும் 48 வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிதி ஆதரவும் பிற பயிற்சி தொடர்பான ஆதரவும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 வீரர்களில் ஒருவர் திருபன் தனராஜன், 23.

ஓடிக்கொண்டிருந்த பள்ளி நண்பனைத் துரத்திப் பிடிக்க முற்பட்டபோது, தற்செயலாகத் தனது வேகத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதையே தன் வாழ்நாள் விருப்பமாக மாற்றிக் கொண்டுள்ளார் ஓட்டப்பந்தய வீரர் திருபன்.

தனது தந்தை தனராஜனும் ஓட்டப்பந்தய வீரர் என்பதால் சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து திருபன் வளர்ந்தார். இதனால் விளையாட்டுத் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு, பள்ளியில் திடல்தட, காற்பந்தாட்ட வீரராக வலம் வந்தார் திருபன்.

தொடக்கக் கல்லூரியிலிருந்து ஓட்டப்பந்தயத்தில் தீவிரப் பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.

தொடர் பயிற்சிக்குப் பின், பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறவே, அது அவருக்கு பெரும் உந்துதலை ஏற்படுத்தியது.

2021 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றார். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2022 ஆசிய வெற்றியாளர் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கும் அவர் தகுதிபெற்றார்.

ஓட்டப்பந்தயம்தான் தனக்கு வாழ்க்கை எனச் சொல்லும் அவர், ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டம் மூலம் கிடைக்கும் ஆதரவு இன்னும் பல உயரங்களை எட்ட உதவும் என நம்புகிறார்.

சாந்தி பெரேராவுக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர் லூயிஸ் குன்யாவிடம் 2022 நவம்பர் முதல் பயிற்சி பெற்றுவரும் திருபன், “சாந்தியின் கடின உழைப்பு, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என அனைத்தையும் கண்டுள்ளேன். அதேபோல, நானும் நன்கு பயிற்சி பெற்று, தேர்ந்த வீரராக மாற விரும்புகிறேன்,” என்றார்.

அதற்கு ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டம் உதவும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பல போட்டிகளிலும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் எனும் கனவுடன் உள்ளார் திருபன்.

குறிப்புச் சொற்கள்