மரினா பே சேண்ட்சின் (எம்பிஎஸ்) விரிவாக்கப் பணிகள் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது கோபுரம், 15,000 இருக்கைகளைக் கொண்ட பொழுதுபோக்கு வளாகம் போன்றவற்றை அமைப்பது மரினா பே சேண்ட்சின் விரிவாக்கப் பணிகளில் அடங்கும்.
விரிவாக்கப் பணிகள் 2029ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவுறும் என்று மரினா பே சேண்ட்ஸ் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 5) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தற்போது மரினா பே சேண்ட்சில் உள்ள கட்டடங்களுக்கும் நான்காவது கட்டடத்துக்கும் இடையே புதிய பொழுதுபோக்கு வளாகம் அமைவதை அந்த வட்டாரத்தைச் சித்திரிக்கும் ஆக அண்மைய ஓவியம் காட்டுகிறது.
ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னணி கலைஞர்களை ஈர்க்கப் புதிய பொழுதுபோக்கு வளாகம் உதவும் என்று தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக மரினா பே சேண்ட்ஸ் கூறியது.
நான்காவது கட்டடத்தைத் தற்போது இருக்கும் கட்டடங்களுக்கு அருகிலும் பொழுதுபோக்கு வளாகத்தைச் சற்று தொலைவில் அமைக்கவும் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
மரினா பே சேண்ட்சின் விரிவாக்கப்படும் பகுதிகளை சாஃப்டி ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. தற்போதைய மரினா பே சேண்ட்ஸ் வட்டாரத்தையும் அந்நிறுவனம்தான் வடிவமைத்திருக்கிறது.
கட்டட வடிவமைப்பாளர் மொஷி சாஃடியின் தலைமையில் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விரிவாக்கப்படும் பகுதிகளில் புதிய உணவு, பானக் கடைகள் உள்ளிட்டவையும் இடம்பெறும் என்று மரினா பே சேண்ட்ஸ் தெரிவித்தது.
வரும் ஆண்டுகளில் பொருளியல், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் மரினா பே சேண்ட்ஸ் ஆற்றும் பங்கை அதிகரிக்க சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க இந்த முதலீடு உதவும் என்று மரினா பே சேண்ட்சை நடத்தும் லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான பேட்ரிக் டுமோன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

