கொவிட்-19 தொற்றுப் பரவலால் நிறுத்தப்பட்டிருந்த ஆர்ச்சர்ட் ரோடு இரவுச் சந்தை நிகழ்வு 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இவ்வாண்டு மீண்டும் இடம்பெற்றது.
மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளியன்று தொடங்கிய இந்தச் சந்தை மார்ச் 31ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் மூன்று மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இடம்பெற்றது.
சிங்கப்பூரில் வளர்ந்து வரும் பல்வேறு உள்ளுர், வட்டார வணிகர்களை இச்சந்தை அறிமுகப்படுத்தியது.
மார்ச் மாதம் நடந்து முடிந்த சந்தையில் விஸ்மா ஏட்ரியா கடைத்தொகுதி முதல் நீ ஆன் சிட்டி கடைத்தொகுதி வரை ஏறக்குறைய 50 வணிகச் சாவடிகள் நேர்த்தியான முறையில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன.
அவை உடல்நலம், செல்லப்பிராணிப் பராமரிப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உணவு, சில்லறை வணிகம், புத்தகம் மற்றும் பலதரப்பட்ட வயதினருக்கும் உகந்த விளையாட்டுகளையும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியிருந்தன.
நண்பர்களுடன் வந்திருந்த கோபிகா, 22, இது போன்ற சந்தைகளுக்குத் தான் அடிக்கடி வருவதாக கூறினார். தனக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதற்கும் இளம் தொழில்முனைவர் மற்றும் சிறு தொழில் செய்பவர்களுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்கும் இது போன்ற சந்தைகள் நல்ல வாய்ப்பை அமைத்துக்கொடுப்பதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர், மூத்த தலைமுறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் ஒருவரான 46 வயது பிரியா ஜெயராம், தன் இரண்டு பதின்ம வயது மகள்களுடன் ஆர்ச்சர்ட் சாலைக்கு வந்ததாக சொன்னார்.
“இந்தச் சந்தைக்கு வந்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடித்த விஷயங்களை அறிந்துகொள்வது ஒரு சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நான் வளர்ந்த காலத்தில் அவ்வளவாக இருந்ததில்லை. காலத்திற்கு ஏற்றாற்போல் கடைகளும் உருமாறி வருகின்றன,” என்றார் அவர். அதற்குச் சான்றாக, தன் மகள்களில் ஒருவர் எப்படித் தனது கைப்பேசிக்கான உறையைத் தானே ஒரு கடையில் வடிவமைத்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார் திருவாட்டி பிரியா.
தொடர்புடைய செய்திகள்
‘நைட் அட் ஆர்ச்சர்ட்’ நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரமும் வெவ்வேறு கருப்பொருளோடு நடத்தப்படும். மார்ச் மாதத்தில் இந்நிகழ்ச்சியைத் தவறவிட்டவர்கள் ஏப்ரல் மாதத்தில் மேலும் புதிய அம்சங்களுடன் எதிர்பார்க்கலாம்.