தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை 8.4% கூடியது

2 mins read
5cde06a9-f3f5-42ba-bad1-78dd5efc253d
உணவு, மதுபான சில்லறை விற்பனை ஆக அதிக வளர்ச்சி கண்டது. - படம்: சிங்கப்பூலா

சிங்கப்பூரில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சில்லறை விற்பனை கணிசமாகக் கூடியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக சில்லறை விற்பனை அதிகரித்தது. ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதம் சில்லறை விற்பனை 8.4 விழுக்காடு அதிகரித்தது. ஜனவரி மாதத்தில் அந்த விகிதம் 1.6 விழுக்காடாகப் பதிவானது.

வாகன விற்பனையைக் கருத்தில்கொள்ளாவிட்டால் ஆண்டு அடிப்படையில் பிப்ரவரிக்கான விகிதம் 9.4 விழுக்காடாகவும் ஜனவரியில் 1.8 விழுக்காடாகவும் பதிவானதென்று வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 5) சிங்கப்பூர் புள்ளி விவரப் பிரிவு குறிப்பிட்டது.

பருவத்துக்கு ஏற்றவாறு கணிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி ஜனவரியில் பதிவானதைவிட பிப்ரவரியில் விற்பனை விகிதம் மூன்று விழுக்காடு கூடியது.

ஆண்டு அடிப்படையில் உணவு, மதுபான சில்லறை விற்பனை பிப்ரவரியில் 31.4 விழுக்காடு அதிகரித்தது. பேரங்காடிகள், பெரும் பேரங்காடிகள் ஆகியவற்றில் சில்லறை விற்பனை 19.2 விழுக்காடு உயர்ந்தது.

உணவு, மதுபான விற்பனைதான், சுமார் ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் வெகு விரைவில் ஆக அதிக வளர்ச்சி கண்டதென டிபிஎஸ் வங்கியின் பொருளியல் வல்லுநர் சுவா ஹான் டெங் குறிப்பிட்டார். விழாக்காலத்தில் உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் என இரு தரப்பினரும் அதிகம் செலவு செய்தது விற்பனை வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்றார் திரு சுவா.

பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கிய சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே பயணிகள் விசா இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதும் சீனப் புத்தாண்டுக் காலத்தில் பல சீன சுற்றுப்பயணிகள் இங்கு வருகை தந்ததும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.

கைக்கடிகாரம், நகை ஆபரணங்கள் ஆகியவற்றின் விற்பனை 16.8 விழுக்காடு கூடியது. அதேவேளை, கண் பார்வை சம்பந்தப்பட்ட பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் விற்பனை 9.3 விழுக்காடு குறைந்தது.

கணினி, தொலைத்தொடர்புப் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையும் 7.7 விழுக்காடு விழுந்தது.

வாகன விற்பனை 1.5 விழுக்காடு கூடியது. பிப்ரவரி மாதம் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் குறைந்தது அதற்குக் காரணம் என்றார் ஓசிபிசி வங்கியின் மூத்த பொருளியல் வல்லுநர் செலினா லிங்.

குறிப்புச் சொற்கள்