தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடகைதாரர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி

1 mins read
4915f3b6-ce04-4b77-9d61-d30941454e5e
இதுபோன்ற மின்னஞ்சலை அனுப்பி மேற்கொள்ளப்படும் மோசடி. - படம்: சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்

சிங்கப்பூரில் வாடகைக்குக் குடிபோகவிருப்போரைக் குறிவைத்து புதிய வகை மோசடி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) எச்சரித்துள்ளது.

திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 8) ஐராஸ் இந்த எச்சரிக்கையை விடுத்தது. ஐராஸ் அதிகாரிகளைப் போல் நடிக்கும் மோசடிக்காரர்கள், முன்பணமாகத் தகுதித்தொகையை (வேலிடே‌ஷன் டெப்பாசிட்) வாடகை வீட்டு உரிமையாளர்களிடம் செலுத்துமாறு வாடகைதாரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவர். அந்தத் தொகையைச் செலுத்தினால்தான் தாங்கள் வசிக்கவிருக்கும் வாடகை வீட்டை சரிவரப் பதிவுசெய்யமுடியும் என்று மோசடிக்காரர்கள் எச்சரிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு ஒன்றுக்கு அந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு வாடகைதாரர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமானது என்ற பொய்த் தகவலும் வாடகைதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

இந்த மோசடி எழுந்துள்ள நிலையில், வாடகைதாரர்கள் தங்களுடன் பதிவுசெய்துகொள்ளத் தேவையில்லை என்று ஐராஸ் கூறியது. வாடகைதாரருக்கோ வீட்டு உரிமையாளருக்கோ ஐராஸ் இத்தகைய மின்னஞ்சல்களை அனுப்பாது என்றும் அது குறிப்பிட்டது.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்டோரை காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு ஐராஸ் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்