மரினா சவுத் பியரில் அமைந்துள்ள, துறைமுகச் சேவை வழங்கும் மின்படகுகளுக்கான பொது மின்னூட்ட வசதி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சோதிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் இத்தகைய மின்னூட்ட வசதிகளை அமைப்பதற்கான ஈராண்டுத் திட்டத்தின்கீழ் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
இந்தச் சோதனைத் திட்டத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தேசிய அளவிலான மின்படகு மின்னூட்ட உள்கட்டமைப்புக்கான பெருந்திட்டத்தை உருவாக்கும்.
பின்னர் அத்தகைய மின்னூட்ட வசதிகளுக்கான தேசியத் தரநிலைகளை வகுத்து, அதுதொடர்பான திட்டங்களையும் நடப்புக்குக் கொண்டுவரும்.
சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பிக்சிஸ் அண்ட் எஸ்பி மொபிலிட்டி’ நிறுவனம், மரினா சவுத் பியரில் உள்ள மின்னூட்டியை நிறுவியுள்ளது.
நிலத்தில் பயணம் செய்யக்கூடிய மின்வாகனங்களுக்கு விரைவாக மின்னூட்டம் செய்யும் மின்னூட்டிகளைப் போன்றே இது இயங்கும். மின்னூட்டியில் வாகனத்தை இணைக்கும் பகுதி கடல் நீரில் விழாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சோதனைமுறையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘பிக்சிஸ் எக்ஸ் டிரான்’ எனும் முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய பயணிகள் படகுக்கு மின்னூட்டம் செய்யப்பட்டது.
500 கிலோவாட் திறன்கொண்ட மின்கலனை இந்த மின்னூட்டி மூலம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் மின்னூட்டம் செய்ய முடியும். ஒருமுறை மின்னூட்டம் செய்தால் அப்படகு ஏறக்குறைய 90 கிலோமீட்டர் தொலைவு வரை பயணம் செய்யும்.
தொடர்புடைய செய்திகள்
மின்கார்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு ஈடாக இந்த மின்படகுகளுக்கான கட்டணமும் அமையும் என்று எஸ்பி குழுமம் தெரிவித்தது. வழக்கமான இடைவெளியில் இந்தக் கட்டணம் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அது கூறியது.
டீசலில் இயங்கும் படகுகளைவிட மின்படகுகள் கூடுதல் செயல்திறனுடன் இயங்க முடியும் என்று பிக்சிஸ் நிறுவனம் கூறியது.
சிங்கப்பூரில் இப்போது ஏறக்குறைய 1,600 படகுகள் துறைமுகச் சேவை வழங்குகின்றன. அவற்றில் ஆறு மட்டுமே மின்படகுகள் என்று ஆணையம் கூறியது.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் துறைமுகச் சேவை வழங்கும் புதிய படகுகள் அனைத்தும் மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.