ஆசியானில் விரிவடைய அதிக ஜெர்மானிய நிறுவனங்கள் விருப்பம்: லாரன்ஸ் வோங்

2 mins read
d50af2d0-1677-4274-8a2d-d769bc903c81
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (இடம்), ஏப்ரல் 8ஆம் தேதி பெர்லினில் ஜெர்மானிய அதிபர் ஃபிரேங் வால்டர் ஸ்டெய்ன்மெயரைச் சந்தித்தார். - படம்: தகவல், தொடர்பு அமைச்சு

ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் ஆசியான் வட்டாரத்தில் விரிவாக்கம் காண விரும்புவதாகவும் இந்த வட்டாரத்திற்கான நுழைவாயிலாக அவை சிங்கப்பூரைக் கருதுவதாகவும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஏப்ரல் 8ஆம் தேதி அங்குள்ள முக்கிய தொழில்துறைத் தலைவர்கள் சிலரைச் சந்தித்தார்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே 2,300 ஜெர்மானிய நிறுவனங்கள் செயல்படுவதாகத் திரு வோங் , ஏப்ரல் 9ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

“அதிக அளவில் ஜெர்மானிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படுவதை வரவேற்கிறோம். பங்காளிகளாக இணைந்து, கூடுதலாகப் பணியாற்ற விரும்புகிறோம்,” என்று துணைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி அவர் ஜெர்மானிய அதிபர் ஃபிரேங் வால்டர் ஸ்டெய்ன்மெயரைச் சந்தித்தார்.

சந்திப்பில் தாங்கள் இருவரும் சவால்கள் நிறைந்த உலகில், பலதரப்புப் பங்காளித்துவத்தையும் விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்கையும் வலுப்படுத்த சிங்கப்பூரும் ஜெர்மனியும் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பது குறித்துக் கலந்துரையாடியதாகத் திரு வோங் கூறினார்.

ஏப்ரல் 9ஆம் தேதி ஜெர்மனியின் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், நிதியமைச்சர் கிறிஸ்டியன் லிண்டர், துணைப் பிரதமரும் பொருளியல் அமைச்சருமான ராபர்ட் ஹேபக் ஆகியோரைத் துணைப் பிரதமர் வோங் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், பெர்லினில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார்.

ஏப்ரல் 10ஆம் தேதி தமது ஜெர்மானியப் பயணத்தை முடித்துக்கொண்டு பின்னர் 13ஆம் தேதி வரை திரு வோங் ஃபிரான்ஸ் செல்கிறார்.

ஜெர்மனி, ஃபிரான்ஸ் ஆகியவற்றுடனான சிங்கப்பூரின் நீண்டகால, பன்முக நல்லுறவை மேம்படுத்துவது அவரது பயணத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்