வீட்டில் விழுந்து தலையில் அடிபட்டதில் 11 வயதுச் சிறுமி உயிரிழப்பு

வீட்டில் விழுந்து தலையில் அடிபட்டதில் 11 வயதுச் சிறுமி உயிரிழப்பு

2 mins read
73e87361-5f4c-4409-ac53-ffb452b4fb2c
முகம்மது ஸுல்ஹய்டி ஹசான்-நூர்சஹிதா முகம்மது அமின் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் நூரின் ஃபாத்திஹா மூத்தவர். - படம்: நூர்சஹிதா முகம்மது அமின்/டிக்டாக்

கடந்த மாதம் சிங்கப்பூரில் பெற்றோர் இருவர், தங்கள் 11 வயது மகளை இழந்த துயரத்தைச் சந்தித்தனர்.

அட்மிரல்ட்டியில் உள்ள வீட்டில் தம் உடன்பிறப்புடன் விளையாடிக்கொண்டு இருந்த நூரின் ஃபாத்திஹா முகம்மது ஸுல்ஹய்டி, கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது.

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த நாள் அவர் உயிரிழந்ததாக மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

எண்டேவர் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த நூரின், மூன்று பிள்ளைகளில் மூத்தவராவார்.

மார்ச் 5ஆம் தேதி, நூரினின் தாயார் திருவாட்டி நூர்சஹிதா முகம்மது அமின், 36, வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தமக்கு தலைவலி ஏற்பட்டிருப்பதாக நூரின் அவரிடம் சொன்னார்.

அன்றைய தினம் நூரினுக்கு தலையில் அடிபட்டதாக அவர்களுடைய இல்லப் பணிப்பெண் திருவாட்டி நூர்சஹிதாவிடம் கூறினார்.

உடன்பிறப்புடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது தரை விரிப்பு தடுக்கி விட்டதில் நூரினின் தலை தரையில் அடித்ததாக திருவாட்டி நூர்சஹிதாவிடம் பணிப்பெண் சொன்னார்.

திருவாட்டி நூர்சஹிதா, மகளுக்கு வலி நிவாரண மருந்தைக் கொடுத்தார். ஆனால், அதை உட்கொண்ட பிறகு நூரின் வாந்தி எடுத்தார்.

மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தாயார் முன்வந்தாலும், வீட்டில் ஓய்வெடுக்க விரும்பியதாக நூரின் கூறினார்.

பின்னர் நூரினுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதுடன் அவருக்கு வாயில் நுரை தள்ளியது.

நள்ளிரவு வாக்கில், திருவாட்டி நூர்சஹிதாவும் அவருடைய கணவர் முகம்மது ஸுல்ஹய்டி ஹசானும் ஆம்புலன்சை அழைத்தனர்.

நூரினுக்கு 80 விழுக்காடு உள்காயம் ஏற்பட்டதாக கூ டெக் புவாட் மருத்துவமனையில் பெற்றோர் தெரிந்துகொண்டனர்.

அடுத்த நாளான மார்ச் 6ஆம் தேதி, காயங்கள் காரணமாக நூரின் உயிரிழந்தார்.

“உங்கள் பிள்ளை வீட்டில் விழுந்தால், காத்திருக்க வேண்டாம் என எல்லாரிடமும் சொல்ல விரும்புகிறேன். மருத்துவரிடம் சென்று உடல்நலனைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்,” என்று திருவாட்டி நூர்சஹிதா அறிவுறுத்தினார்.

நூரின் இறந்த அதே நாள் அவரது உடல் புசாரா அமான் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்