தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரையோரப் பூந்தோட்டங்களில் ஆர்ப்பாட்டப் பதாகை சம்பவம் குறித்து விசாரணை

2 mins read
ae57dd7b-239c-4d28-8782-f9bee76864cd
காணொளியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் ஓசிபிசி ஸ்கைவேயில் ஒரு பதாகையை விரிப்பதைக் காணமுடிகிறது. - படம்: சிங்கப்பூரியன்ஸ் ஃபார் பாலஸ்தீன்/இன்ஸ்டகிராம்

சிங்கப்பூர் இஸ்‌ரேலுடனான ஆயுத வர்த்தகத்தை நிறுத்த வேண்டுமெனக் கோரும் பதாகை கரையோரப் பூந்தோட்டங்களில் காணப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொளிப் பதிவு இன்ஸ்டகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது.

காணொளியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் ஓசிபிசி ஸ்கைவேயில் நின்றபடி ஒரு பதாகையை விரிப்பதைக் காணமுடிகிறது. “சிங்கப்பூர்-இஸ்ரேல் ஆயுத விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருக” எனப் பொருள்படும் ஆங்கில வாசகம் அந்தப் பதாகையில் இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி மாலை தாங்கள் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

கண்முன்னே நிகழும் மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாத போக்கைக் கண்டித்து 50 நகரங்களை முற்றுகையிடும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டனர்.

காஸாவில் சண்டை நிறுத்தம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனப் பேச்சில் பங்கு வகிப்பதுடன் பாலஸ்தீனர்களுக்கு மனிதநேய உதவியையும் சிங்கப்பூர் வழங்கினாலும், அது வன்செயல்களை அனுமதிப்பதைத் தொடர்ந்தால் காஸா தொடர்பான அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றவை ஆகிவிடும் என்று அவ்வறிக்கை கூறியது.

இஸ்‌ரேலிடமிருந்து சிங்கப்பூர் ஆயுதங்களை வாங்குவதால் காஸா போருக்கான நிதியை இஸ்‌ரேல் பெறுவதாகவும் இரு நாடுகளும் இணைந்து தயாரித்த ஆயுதங்கள் தற்போது அந்தப் போரில் பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

வேறு வழியின்றித் தங்களது அவசரத் தேவை குறித்து கவனம் ஈர்க்கும் நடவடிக்கையாக இவ்வாறு செய்கிறோம் என்றும் பாலஸ்தீனம் விடுதலை பெறும்வரை யாரும் சுதந்திரமானவர்கள் அல்லர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட மேல்விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும் இதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கரையோரப் பூந்தோட்டங்களின் பேச்சாளர் கூறினார். காவல்துறை விசாரணை நடைபெறுவதால் மேல்விவரங்களைத் தர இயலாது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்