சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தேனில் ஊறிய பேரீச்சம்பழங்களை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
யான் டாய் யிட் நிறுவனம் இறக்குமதி செய்த அந்தப் பேரீச்சம்பழங்களில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய சல்ஃபர் டையாக்சைடு எனும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
அதுகுறித்து பொட்டலத்தில் தகவல் குறிப்பிடப்படவில்லை.
2025ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பேரீச்சம் பழங்களை வாங்கியிருந்தால் அவற்றை உட்கொள்ள வேண்டாமென ஏப்ரல் 18ஆம் தேதி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக உணவுப் பொருள்களில் சல்ஃபைட் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படும்போது சல்ஃபர் டையாக்சைடு உள்ளதா என்று சோதிக்கப்படுவது வழக்கம்.
பெரும்பாலான பயனாளர்களுக்கு சல்ஃபைட்டால் பாதிப்பு ஏதுமில்லை என்றபோதும் சிலருக்கு அதனால் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு சுட்டியது.
அத்தகையோருக்கு தோலில் அரிப்பு, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றோட்டம் போன்றவை ஏற்படலாம்.
சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பொருள்கள் குறித்து பொட்டலத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று அமைப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே அந்தப் பேரீச்சம் பழங்களை உட்கொண்டோர் தங்கள் உடல்நலம் குறித்துக் கவலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகும்படி அமைப்பு ஆலோசனை கூறியது.
மேல்விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தாங்கள் அவற்றை வாங்கிய கடைகளை நாடலாம் எனக் கூறப்பட்டது.

