சென்னையில் மார்ச் மாதம் நடந்த ‘எடிசன்’ விருது நிகழ்ச்சியில் ‘ஓ பட்டர்ஃப்லை’ சிங்கப்பூர் நாடகத் தொடர், சிறந்த அனைத்துலகத் தமிழ் நாடகத் தொடருக்கான விருதை வென்றது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாடகத் தொடர் விருது பெற்றது இதுவே முதன்முறை.
புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவிடம் விருதைப் பெற்ற நாடகத்தின் இயக்குநர் குமரன் சுந்தரம், 38, “அந்தத் தருணம் கனவு போன்று இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.
“ஓ பட்டர்ஃப்லையின் தயாரிப்பு ஒரு நீண்ட பயணம். காதல் கதை ஒன்றை நாடகத் தொடராக இயக்கிய முதல் அனுபவம். இதில் சிங்கப்பூர், மலேசியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து கடினமாக உழைத்தனர். அதற்கான அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் வழங்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கிய ‘ஸ்டோரிபோட்ஸ் ஏஷியா’ இதுவரையில் மொத்தம் 12 விருதுகளை உள்ளூரிலும் வெளியூரிலும் வென்றுள்ளது.
“ஒரு தொடரை தயாரிப்பதன் மூலம் மக்களிடம் ஒரு கதையை சேர்க்கிறேன். அவர்களுடன் இணைகிறேன்,” என்றார் அவர்.
தொடர்ந்து வரும் காலங்களில் ‘ஸ்டோரிபோட்ஸ் ஏஷியா’ பல புகழ்பெற்ற திரை நிறுவனங்களுடன் பணிபுரிந்து மேலும் சாதனை படைத்து ஒரு குழுவாக உயரும் என்பதில் உறுதிகொண்டுள்ளார் திரு குமரன்.
தொடர்புடைய செய்திகள்
“ஓ பட்டர்ஃப்லை” நாடகத் தொடரை ‘மீவாட்ச்’, ‘யூடியூப்’ ஊடகத் தளங்களில் காணலாம்.

