பிரதமர் லீயின் கவனமெல்லாம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதே: அமைச்சர் சண்முகம்

2 mins read
fe952721-b201-40ba-8d32-ec5277e9dd7a
இன, சமய வேறுபாடின்றி, சிங்கப்பூரர்கள் ஒரே மக்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு அறிந்திருந்த, அந்த ஒற்றுமையைப் பேண களைப்பறியாது உழைத்த ஒருவரை நாம் பிரதமராகப் பெற்றிருப்பது நமது நற்பேறு என்று பிரதமர் லீ சியன் லூங்கிற்கு (வலது) புகழாரம் சூட்டினார் அமைச்சர் சண்முகம். - படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 16 ஆண்டுகளாக, தாம் பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துறவாடியபோதெல்லாம், அவரது கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதுதான் இருந்தது எனப் புரிந்துகொண்டேன் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரையும் நமது ஒற்றுமையையும் வலுப்படுத்துவது எப்படி, சிங்கப்பூரை எல்லாருக்கும் சிறந்ததொரு இல்லமாக்குவது எப்படி என்பனவற்றிலேயே திரு லீ கவனம் செலுத்தி வந்ததாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பைப் பாதுகாக்கும் அம்சம் என்பதால், இன, சமய நல்லிணக்கத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தில் அவர் எப்போதுமே நம்பிக்கை கொண்டிருப்பதாகத் திரு சண்முகம் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, வெற்றிச் சமூகங்களுக்கான அனைத்துலக மாநாட்டின்போது, ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்குவதிலும் அதில் சிறுபான்மையின, பெரும்பான்மையின மக்களின் பங்கு தொடர்பிலும் சிங்கப் பூரின் அணுகுமுறை குறித்து திரு லீ பேசினார்.

“ஒரு பல்லினச் சமூகத்தில், சிறுபான்மையினரின் நலன்களை மதிப்பதிலும் அங்கீகரிப்பதிலும் பெரும்பான்மையின மக்கள் ஓரடி முன்னே செல்ல வேண்டும்,” என்று பிரதமர் லீ குறிப்பட்டதை திரு சண்முகம் நினைவுகூர்ந்தார்.

சென்ற 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அறநிறுவனம் பிரதமர் லீக்கு ‘உலகின் சிறந்த அரசதந்திரி’ எனும் விருதை வழங்கிச் சிறப்பித்தது. அவ்விருதை ஏற்றுக்கொண்டபோது பேசிய பிரதமர் லீ, “சிங்கப்பூரின் பல இன, வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் அனுபவிக்கும் சமத்துவமானது, கொள்கைகள், ஆணைகள் அல்லது அரசு நடவடிக்கைகளால் மட்டும் எட்டப்படவில்லை. அது சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கை மூலமும் சமயத் தலைவர்கள் மூலமும் வலுப் படுத்தப்படுகிறது,” என்று கூறி இருந்தார்.

தமது இலக்கை நோக்கிய பயணத்தின்போது எழுந்த உணர்வுபூர்வமான விவகாரங்களை எதிர்கொள்வதில் இருந்து பிரதமர் பின்வாங்கியதே இல்லை என்றார் அமைச்சர் சண்முகம்.

கடந்த 2016ஆம் ஆண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை குறித்து மறுஆய்வு செய்ய ஒர் அரசியலமைப்பு ஆணையத்தை அவர் நியமனம் செய்தார். அந்த ஆணையம் தாக்கல் செய்த திருத்தங்கள் 2016ல் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அவ்வப்போது சிறுபான்மையினரும் அதிபராகச் செயல்பட வாய்ப்பளிப்பது அவசியம் என்பதைப் பிரதமர் லீ அறிந்துவைத்திருந்ததாகத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

அதன்பின் 2021ல், முஸ்லிம் தாதியர் தாங்கள் விரும்பினால் வேலையிடத்தில் தங்கள் சீருடையுடன் ‘தூடோங்’ அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று திரு லீ அறிவித்தார்.

பல்வேறு இன, சமய மக்களுடன் கலந்து பழகும் வகையில், பல உள்ளூர்க் கலாசார அல்லது சமய நிகழ்வுகளில் பிரதமர் லீ பங்கேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“இன, சமய வேறுபாடின்றி, சிங்கப்பூரர்கள் ஒரே மக்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு அறிந்திருந்த, அந்த ஒற்றுமையைப் பேண களைப்பறியாது உழைத்த ஒருவரை நாம் பிரதமராகப் பெற்றிருப்பது நமது நற்பேறு,” என்று திரு சண்முகம், பிரதமர் லீக்குப் புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்