பிரதமர் லீயின்கீழ் சிங்கப்பூர் நாணயத்தின்மதிப்பு 40% கூடியது

1 mins read
60f75c15-e474-4744-93c0-06ee59aec9f8
வலுவான சிங்கப்பூர் நாணய மதிப்பால் உள்ளூர்ப் பங்குச் சந்தை மிகவும் பலனடையும். - படம்: சாவ்பாவ்

பிரதமர் லீ சியன் லூங் 2004ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து, முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு ஏறத்தாழ 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.

புளூம்பெர்க் நிறுவனம் தொகுத்த தரவுகள் இதைக் காட்டுகின்றன.

பங்காளித்துவ நாடுகளின் நிலவரங்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் அரசாங்கப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய், திரு லீ பதவியேற்ற பிறகு, ஏறக்குறைய 16 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அவரது 20 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர்ப் பொருளியலின் மதிப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து $532.3 பில்லியனாக உள்ளது.

அரசாங்கச் சொத்துகளின் மதிப்பு எட்டு மடங்கு உயர்ந்து $4.9 டிரில்லியனாக உள்ளது.

திரு லீயின் ஆட்சியின்கீழ், உலகின் ஆகச் சிறந்த நிதி நடுவங்களில் ஒன்றாகப் பெயர்பெற்றுள்ள சிங்கப்பூர், உலகத் திறனாளர்களை ஈர்க்கும் இடமாகவும் விளங்குகிறது.

திரு லீ பிரதமராகப் பதவியேற்ற பிறகு சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு வலுவடைந்ததன் எதிரொலியாக உள்ளூர்ப் பங்குச்சந்தை பெருத்த பலனடைந்துள்ளது. அமெரிக்க டாலர் அடிப்படையில், மற்ற ஆசியான் நாடுகளுடன் ஒப்புநோக்க ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 32 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

திரு லாரன்ஸ் வோங், மே 15ஆம் தேதி நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்ற பிறகு உள்ளூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகப் பொருளியல் வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அரசாங்க முதலீட்டு நிறுவனம் உள்ளூர்ச் சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் சாத்தியத்தை அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்