தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரவுநேர ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்குக் கூடுதலாக 200 இடங்கள் ஒதுக்கீடு

2 mins read
தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் இரவுநேர சிகிச்சை விரிவாக்கம்
8758809c-434b-4b1f-8910-3d51ad9f80d3
மக்கள்தொகை விரைவாக மூப்படையும் நிலையில் அதிகரிக்கும் தேவைகளை ஈடுகட்டும் பொருட்டு இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய சிறுநீரக அறநிறுவனம் (என்கேஎஃப்), இரவுநேரத்தில் ‘டயாலிசிஸ்’ எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கவிருக்கிறது.

தற்போது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் அத்தகைய 36 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 2027க்குள் ஐந்து சுத்திகரிப்பு நிலையங்களில் மொத்தம் 250 இடங்களாக அது உயர்த்தப்படும்.

மக்கள்தொகை விரைவாக மூப்படையும் நிலையில் அதிகரிக்கும் தேவைகளை ஈடுகட்டும் பொருட்டு இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

அறநிறுவனத்தின் 55ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சி, ஏப்ரல் 25ஆம் தேதி, கிம் கியட் ரோட்டில் அமைந்துள்ள என்கேஎஃப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர் முழுவதும் என்கேஎஃப்பின் 41 ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் சேவை வழங்கிவருகின்றன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 5,500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் சுமார் 3,500 பேர் தனியார் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெறுவதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் அன்றாடம் புதிதாக ஆறு பேருக்கு சிறுநீரகச் செயலிழப்பு கண்டறியப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்குமுன் 5,500ஆக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது 8,800ஆகப் பதிவாகியுள்ளது,” என்று கூறினார்.

நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகச் செயலிழப்புக்கு முக்கியக் காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளான நோயாளிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க, வீட்டுச் சூழலில் ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்ளும் ஈராண்டுத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு விரிவுபடுத்த விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது இத்திட்டத்தின்கீழ், 300 நோயாளிகள் பதிந்துகொண்டுள்ளனர்.

தேவையும் சிகிச்சைக்கான கட்டணமும் அதிகரிக்கும் நிலையில், ரத்தச் சுத்திகரிப்புக் கட்டணத்தைச் செலுத்த அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்கும் என்றார் திரு ஓங்.

என்கேஎஃப்பில் ஓராண்டுக்கான சிகிச்சைக்கு நோயாளி ஒவ்வொருவருக்கும் ஏறக்குறைய $30,000 செலவாகிறது. 2023ல் இங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் பெரும்பாலோர் மாதம் $50 மட்டுமே செலுத்தினர். பத்தில் நான்கு பேர் கட்டணம் செலுத்தவில்லை.

ரத்தச் சுத்திகரிப்பு போன்ற சிகிச்சைகளுக்கான மெடிசேவ் வரம்புகளைச் சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்வதாகத் திரு ஓங் கூறினார். இந்த சிகிச்சைக்கான மெடிஷீல்டு லைஃப் வரம்பை உயர்த்துவது தொடர்பில் மெடிஷீல்டு லைஃப் மன்றத்துடன் அமைச்சு இணைந்து பணியாற்றுவதாக அவர் சொன்னார்.

2016ல் இரவுநேர ‘டயாலிசிஸ்’ சிகிச்சையை என்கேஎஃப் அறிமுகப்படுத்தியது. பகலில் நான்கு மணி நேரத்துக்குப் பதிலாக இரவில் ஏழு அல்லது எட்டு மணி நேரம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிகிச்சை, தற்போது அதன் ஹவ்காங், கிளமெண்டி நிலையங்களில் வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்