தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் காலாண்டில் சாங்கி விமான நிலையப் பயணிகள் எண்ணிக்கை கொவிட்-19க்கு முன்பிருந்ததைவிட அதிகம்

2 mins read
7811d13f-c0bc-489d-969b-49de8e711b6a
2024 ஜனவரிக்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் 16.5 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தைக் கடந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்துக்கு இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 16.5 மில்லியன் பயணிகள் வந்துசென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

காலாண்டு அடிப்படையில், கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது 0.5 விழுக்காடு அதிகம்.

சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி), ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாண்டு ஜனவரியில் சாங்கி விமான நிலையத்திற்கு 5.43 மில்லியன் பயணிகள் வந்துசென்றனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்த எண்ணிக்கை முறையே 5.35 மில்லியனாகவும் 5.73 மில்லியனாகவும் பதிவானது.

2019ஆம் ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் அவை முறையே 96, 104.3, 101.7 விழுக்காடு அதிகம்.

சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தைக் கடந்து சென்றனர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாங்கி விமான நிலையம் அதிகமான பயணிகளுக்குச் சேவை வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனா, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

2023ல் இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா ஆகியவை முதல் ஐந்து இடங்களிலும் சீனா ஆறாவது இடத்திலும் இருந்தன.

அண்மையில் சிங்கப்பூரும் சீனாவும் இரு நாட்டுப் பயணிகளுக்கும் 30 நாள் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கின. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இந்த நடைமுறை நடப்புக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் அதிகரித்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனா அதிகமான பயணிகளுக்கான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வழிவகுத்துள்ளதாகக் குழுமம் கூறியது.

குறிப்புச் சொற்கள்